Published : 16 May 2022 07:59 AM
Last Updated : 16 May 2022 07:59 AM

தாம்பரம் அருகே ரூ.25 கோடியில் தொடங்கப்பட்ட ஏரி சீரமைப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தம்: போராட்டத்தில் ஈடுபட அதிமுக திட்டம்

தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் ரூ. 25 கோடியில் தொடங்கப்பட்ட ஏரி சீரமைப்புப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பணிகளை தொடர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

தாம்பரத்தை அடுத்து 219 ஏக்கரில் அமைந்துள்ள சிட்லபாக்கம் பெரிய ஏரி நீர்வள ஆதாரத் துறையின் பராமரிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பு போக, தற்போது ஏரியின் பரப்பு 95 ஏக்கராக சுருங்கி உள்ளது. ஏரியை மீட்டு சீரமைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்தன.

இந்த விளைவாக தமிழ்நாடு சுற்றுச் சூழல் மேலாண்மை முகமை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் சிட்லபாக்கம் ஏரி சீரமைப்புக்கு 2019-ம் ஆண்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

நடைபெறும் பணிகள்

பின்னர் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் ஏரியை ஆழப்படுத்தி, குப்பைகளை அகற்றுதல், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் பேவர் பிளாக்கற்களுடன் கூடிய நடைபாதை, மின் விளக்குகள், கரை உடையாமல் இருக்க கான்கிரீட் கற்கள் பதிப்பு, உபரி நீரை வெளியேற 2 ஷட்டர், ஏரியின் மையப்பகுதியில் பறவைகள் இளைப்பாற வசதியாக, 2 குட்டித் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது சீரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரருக்கு அரசு தரப்பில் சுமார் ரூ.4 கோடி நிலுவை உள்ளதால், ஒப்பந்த நிறுவனம் பணிகளை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு பணிகளுக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படாததால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சீரமைப்பு பணியை தொடங்க வலியுறுத்தி வரும் 19-ம் தேதி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறையினர் கூறியதாவது: ஏரி சீரமைப்பு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டமாக ரூ.19 கோடியில் பணிகள் நடைபெற்று 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஒப்பந்ததாரருக்கு ரூ.4 கோடி பாக்கி இருப்பது உண்மைதான். ஒப்பந்ததாரருக்கு பாக்கி மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிதி ஒதுக்காததால் பணிகள் நடைபெறவில்லை என்றனர்.

ஒப்பந்ததாரருக்கு அரசு தரப்பில் சுமார் ரூ.4 கோடி நிலுவை உள்ளதால், ஒப்பந்த நிறுவனம் பணிகளை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x