Published : 16 May 2022 06:13 AM
Last Updated : 16 May 2022 06:13 AM

சிவகங்கை அருகே பீஜப்பூர் சுல்தான் செப்பு காசு கண்டெடுப்பு

கா.காளிராசா

சிவகங்கை: சிவகங்கை அருகே பீஜப்பூர் சுல்தான் செப்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, உறுப்பினர் க.சரவணன் ஆகியோர் சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பகுதியில் 3 பீஜப்பூர் சுல்தான் செப்புக் காசுகளை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து கா.காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதா வது: செப்புக் காசுகள் நேர்த்தியான வட்ட வடிவில் இல்லாமல் முன்னும், பின்னுமாக உள்ளன. தஞ்சை நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமன் உதவியோடு காசுகளை ஆய்வு செய்ததில், அவை பீஜப்பூர் சுல்தான்கள் காசுகள் என்பது தெரியவந்தது.

பீஜப்பூர் சுல்தான்கள் கர்நாடக மாநிலம் பீஜப்பூரை தலைநகராகக் கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும், தெற்கு மகாராஷ்டிரா பகுதியையும் கடந்த 1490-ம் ஆண்டில் இருந்து 1686 ஆண்டு வரை சுமார்196 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். அப்பகுதியை யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

நமக்கு கிடைத்துள்ள காசுகள் செம்பால் ஆனதோடு, அதிக எடை உள்ளதாக உள்ளன. மூன்று காசுகளில் 2 காசுகள் 8 கிராம், ஒரு காசு 7 கிராம் எடை உள்ளன. ஒன்றில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப் பெற்றுள்ளது. மற்ற காசுகளில் பாரசீக எழுத்துகள் உள்ளன. பாரசீக எழுத்தில் அலி அடில் ஷா (1558-1579) என்ற பெயர் குறிப்பிட்டு இருக்கலாம். இவரது காலம் 16-ம் நூற்றாண்டு. இதே காலகட்டத்தில் காசுகள் கண்டெடுக்கப்பட்ட அரசனேரி கீழமேடு பகுதி நாயக்கர் ஆட்சியின் கீழ் பாளையங்களாக இருந்துள்ளன. அதனால் இக்காசுகள் வணிகத் தொடர்பிலோ அல்லது இறைவழி பயணத்திலோ இப்பகுதிக்கு வந்திருக்கலாம்.

பொதுவாக ஆற்றுப் பகுதிகளில்தான் பழங்கால காசுகள் கிடைப்பது வழக்கம். ஆனால் சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வாறான காசுகள் கிடைப்பது அரிதானது என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x