

விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்து. (உள்படம்) உயிரிழந்த செல்வராஜ், இருசாயி, மணிகண்டன், நித்திஷா, ஜீவிதா. | படம்: எஸ்.குரு பிரசாத் |
சேலம்: சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப் பேருந்து சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அரசுப் பேருந்து ஈரோட்டில் இருந்து நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேலத்துக்கு புறப்பட்டது. பேருந்தை மேட்டூர் அருகே வனவாசி பனங்காடு பகுதியைச் சேர்ந்த அய்யந்துரை (49) என்பவர் ஓட்டினார்.
சேலம் அருகே உத்தம சோழபுரம் சூளமேடு பகுதியில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் மீடியனை கடந்து எதிர்புற சாலைக்கு பாய்ந்தது. அந்த வழியே வந்த சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி சர்வீஸ் சாலையின் குறுக்கே சென்று நின்றது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டலாம்பட்டி சந்தனகாரன்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22), அவரது தாய் இருசாயி (60) ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், விபத்துக்குள்ளான சரக்கு வாகனத்தில் நெய்க்காரப்பட்டி புத்தூர் முதல் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் குடும்பத்துடன் மகுடஞ்சாவடி கல்பாரப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் இருந்தனர்.
பேருந்து மோதியதில் சரக்கு வாகனத்தில் இருந்த செல்வராஜ் (50), அவரது உறவினர்கள் முருகன், அமுதா, 11 மாத குழந்தை ஜீவிதா, நித்திஷா (5) ஆகியோர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சத்யா (25) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆட்சியர் ஆய்வு
கொண்டலாம்பட்டி போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து மற்றும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 30 பேர் லேசான காயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சரக்கு வாகன ஓட்டுநர் மேகநாதன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, காவல் துணை ஆணையர் கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
விபத்து நடந்த பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி-யில் பதிவான விபத்து காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ காட்சிகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுநர் கைது
கொண்டலாம்பட்டி போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அரசு பேருந்து ஓட்டுநர் அய்யந்துரை கவனக்குறைவாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அய்யந்துரையை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.