நாகர்கோவில் விசாரணை கைதி கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

நாகர்கோவில் விசாரணை கைதி கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
Updated on
2 min read

நாகர்கோவில்: நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர், பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி இவரது கடையில் தென்தாமரைக்குளம் போலீஸார் சோதனை நடத்தியபோது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததாக பறிமுதல் செய்யப்பட்டன. அவரைக் கைது செய்த போலீஸார், நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி காலை சிறையில் இருந்த சபரிவர்மன் இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சபரிவர்மனின் தாயார், மனைவி ஆகியோர் அவரது உடலை பார்வையிட்டபோது, உடலில் பலத்த காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால், சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சபரிவர்மன் மரணம் குறித்து, அவரது உறவினர்களிடமும், நாகர்கோவில் கிளைச்சிறை காவலர்கள் மற்றும் கைதிகளிடமும், நாகர்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி,மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் விசாரணை நடத்தினார். சிறையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் ஆதாரங்கள் திரட்டப்பட்டன.

19 இடங்களில் பலத்த காயம்

இந்நிலையில், சபரிவர்மனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் மாலை வெளியானது. அதில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் பலமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நேசமணிநகர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில் கிளைச்சிறை தலைமை வார்டனான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த திருமலைநம்பி, வார்டன்களான கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடத்தைச் சேர்ந்த சிவகுமார், தேங்காப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெகன் ஆகிய 3 பேரை. நேற்று முன்தினம் இரவில் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நேசமணிநகர் காவல் நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியிருப்பதாவது: சபரிவர்மன் சிறைக்கு வந்த நாளில் இருந்து, அவருக்கும் சக கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை சிறை வார்டன்கள் சமரசம் செய்துள்ளனர். 12-ம் தேதி இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைதிகள் சிலர் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

மேலும், சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டி வைத்து, வார்டன்களுடன் சேர்ந்து கைதிகளும். அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சபரிவர்மன் சிறைக்குள்ளேயே இறந்துவிட்டார்.

உடலை வாங்க மறுப்பு

கைதான வார்டன்கள் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கைதிகளான விஷ்ணு, ஜெகன், சாரதி, பெருமாள், சரத், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 பேர் மீது போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து. அவர்களை நேற்று கைது செய்தனர்.

இதனிடையே, சபரிவர்மனின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில் விசாரணை கைதி கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
காவிரி நீரை திறந்துவிடக் கோரி ஓசூரில் இருந்து நடைபயணம் சென்ற விவசாயிகள் 100 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in