காவிரி நீரை திறந்துவிடக் கோரி ஓசூரில் இருந்து நடைபயணம் சென்ற விவசாயிகள் 100 பேர் கைது

காவிரி நீரை திறந்துவிடக் கோரி ஓசூரில் இருந்து நடைபயணம் சென்ற விவசாயிகள் 100 பேர் கைது
Updated on
2 min read

ஓசூர்: தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிடக் கோரி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஓசூர் மூக் காண்டப்பள்ளியில் இருந்து கர்நாடக எல்லையை நோக்கி நடைபயணப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் அய்யாக்கண்ணு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். நடைபயணம் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே வந்த போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறும்போது, "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு நீர் வழங்காததால் டெல்டா பகுதி வறட்சியடைகிறது. இதன் மூலம் அப்பகுதியில் மீத்தேன், பெட்ரோலியம் உள்ளிட்ட வளங்களை எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேகேதாட்டில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

வேலுசாமி கூறும்போது, "காவிரி நீரைப் பெறுவதில் தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. காவிரியில் மணல் அள்ள குவாரிகளைத் திறக்க அரசு முயன்றால், அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

வாட்டாள் கட்சியினர் போராட்டம்

இதற்கிடையே, மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்தும், அணை கட்டும் பணியை தாமதப்படுத்துவதாக கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடக மாநில எல்லையான அத்திப் பள்ளியில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி சார்பில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கன்னட கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமை வகித்தார். பின்னர் அங்கிருந்து தமிழகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 70-க்கும் மேற்பட்டோரை ஆனேக்கல் பகுதியில் கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.

வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மேகேதாட்டு அணை மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக மற்றும் தமிழக முதல்வர்கள் சந்தித்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.

பேருந்து போக்குவரத்து பாதிப்பு

போராட்டம் காரணமாக, தமிழக அரசுப்பேருந்துகள் நேற்று மதியம் 1 மணி வரை கர்நாடக எல்லை நோக்கி இயக்கப்படவில்லை. அதேநேரம், கார், லாரிகள் கர்நாடக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. இரு மாநில எல்லைகளிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

காவிரி நீரை திறந்துவிடக் கோரி ஓசூரில் இருந்து நடைபயணம் சென்ற விவசாயிகள் 100 பேர் கைது
Realme Narzo 100x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in