Published : 13 May 2022 12:07 PM
Last Updated : 13 May 2022 12:07 PM

ராஜபக்சே உறவினர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்கக்கூடாது: தமிழ்நாடு முஸ்லிம் லீக்

சென்னை: இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சே மற்றும் அவரது உறவினர்களுக்கு இந்தியாவில் தஞ்சம் அடைய மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி
பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர்.

ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பலத்த ராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார். அதேபோன்று ராஜபக்சே உறவினர்களும் திரிகோணமலையில் உள்ள ராணுவதளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் முஸ்தபா

ராஜபக்சே உள்ளிட்ட சிலரை இலங்கையை விட்டு வெளியேற அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், ராஜபக்சே மற்றும் அவரது உறவினர்கள் இலங்கையை விட்டு தப்பி சென்று, வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்காக பல நாட்டு அரசுகளுடன் பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய உள்துறை அதிகாரிகளிடம், ராஜபக்சேவை சார்ந்தவர்கள் பேசி வருவதாக தெரிகிறது. இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சே மற்றும் அவரது உறவினர்களுக்கு இந்தியாவில் தஞ்சம் அடைய மத்திய அரசு அனுமதி வழங்ககூடாது என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அவரது உறவினர்களை இந்தியாவில் தங்க அனுமதித்தால், அது மாபெரும் வரலாற்று பிழையாக அமைந்துவிடும், ஆகவே இந்த விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து, ராஜபக்சே அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அரசு இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x