Published : 12 May 2022 06:09 AM
Last Updated : 12 May 2022 06:09 AM

தமிழகம் முழுவதும் 52 உரக்கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் உரக்கடைகளில் ஆய்வு செய்ததில், விதிமீறல்கள் காரணமாக 52 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மானிய விலையில் வழங்கப்படும் ரசாயன உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, பதுக்கினாலோ, விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்குப் பயன்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட உரக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அனைத்து உரக்கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைப் பின்பற்றாததால், அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மாதம் 21-ம் தேதி முதல் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 131 உரக்கடைகளில் இருப்பு தகவல் பலகை இல்லாமல் உரங்களை விற்றது, 141 உரக்கடைகளில் உர இருப்பு வித்தியாசம், 51 கடைகள் உரிய அனுமதி பெறாதது, 8 கடைகளில் உர விற்பனை முனையக் கருவி மூலம் பட்டியலிடாமல் விற்பனை செய்தது, 2 கடைகளில் கட்டாயப்படுத்தி உரங்களுடன் இதர இடுபொருட்களையும் இணைத்து விற்றது, 2 கடைகளில் வேளாண் பயன்பாடு இல்லாத இதர பயன்பாட்டுக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, 52 உரக் கடைகளின் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 243 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கலப்பு உர உற்பத்தி நிறுவனம் ஒன்று கண்டறியப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டதுடன், சரக்கு வாகனத்தில் இருந்த 19 மெட்ரிக் டன் கலப்பு உரமும் வாகனத்துடன் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உழவர் உதவி மையத்தில் (செல்போன் எண்: 93634 40360) பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சீரான உர விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x