Last Updated : 09 May, 2022 11:42 PM

 

Published : 09 May 2022 11:42 PM
Last Updated : 09 May 2022 11:42 PM

'ஆன்மிக பூமியான தமிழகத்தை திராவிட மாடல் அரசு வீணாக்கி வருகிறது' - எல்.முருகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஆன்மிக பூமியான தமிழகத்தை இந்த திராவிட மாடல் அரசு வீணாக்கி வருகிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் மீன்வளத்துறையின் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை, மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகம் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "இலங்கையில், நமது மீனவர்களின் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் நடந்தன. மீனவர்கள் எல்லை தாண்டிய பிரச்சினைகளிலும் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை மீட்டு வருகிறோம். விசைப்படகுகள் மீட்பது குறித்து, இரு நாட்டு இணைக் குழுக்கள் மூலம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுக்குள் சர்வதேச அளவிலான கப்பல்கள் வந்து எல்லை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு புதிய சட்டம் நிறைவேற்ற உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2015 -16ம் ஆண்டில் முதன் முறையாக நீலப்புரட்சித் திட்டத்தை தொடங்கி, ரூ.5 ஆயிரம் கோடி அளவில் பணிகளை மேற்கொண்டது. அதில், புதுவைக்கு ரூ. 40 கோடி வழங்கப்பட்டது. இந்த திட்டங்களின் கீழ் விரைவில் புதுவைக்கு ரூ. 218 கோடி அளவில் முதலீடுகள் வர இருக்கின்றன. அதில் ரூ.145 கோடியை மத்திய அரசு வழங்கும். புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.

தமிழகத்தில் திமுக அரசு வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. குறிப்பாக பெண்களுக்கு அறிவித்த ரூ.1,000 உதவித்தொகையை வழங்கவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. பல கிராமங்களில் தனித்தனி சுடுகாடுகள் உள்ளன. ஆன்மிக பூமியான தமிழகத்தை இந்த திராவிட மாடல் அரசு வீணாக்கி வருகிறது. மாநில ஆளுநர்கள் அவர்களது பணியை சரியாக செய்வதில் தவறில்லை" என்று குறிப்பிட்டார்.

இப்பேட்டியின்போது புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசையையும், சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக எல்.முருகன் சந்தித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x