Published : 09 May 2022 10:40 AM
Last Updated : 09 May 2022 10:40 AM

“ஊழலும் குடும்ப ஆட்சியுமே திராவிட மாடல், காங்கிரஸுக்கு ஒரு யோசனை” - ‘துக்ளக்’ விழாவில் குருமூர்த்தி பேச்சு

"மோடி எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கையை மட்டுமே வைத்துக் கொண்டு காங்கிரஸ் தற்கொலை செய்து கொள்கிறது. திமுக மாநில சுயாட்சி என்று பேசிப் பேசியே குடும்ப சுயாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது" என்று ’துக்ளக்’ச் இதழின் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.

’துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி, மோடியை, பாஜகவை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பாராட்டிப் பேசினார். கூடவே காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், இன்னும் பிற கட்சிகளை விமர்சித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி என்ற முழக்கத்தை கிண்டல் செய்து பேசினார்.

அவருடைய பேச்சிலிருந்து... "திராவிட மாடல் ஆட்சி என்று ஸ்டாலின் பேசுகிறார். கேட்டால் அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனக் கூறுகிறார். இதைத்தானே பிரதமர் மோடி நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று பேச்சு. இந்த பஜனையை காது கொடுத்து கேட்கமுடியவில்லை.

திராவிட மாடல் வளர்ச்சியை பெரியார் காலத்திலிருந்து பார்ப்போம். தமிழும் பரம்பொருளும் பிரிக்கமுடியாது, தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கமுடியாது என்பது பெரியாருக்கு தெரியும். அதனால்தான் அவர் தமிழை தூக்கிப் பிடிக்கவில்லை. தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்றார். அடுத்துவந்த அண்ணா இந்தி எதிர்ப்பை கையில் எடுத்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவர் முதலில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார். ஆனால் அதே அண்ணாவை இந்தி திணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க வைத்தார்.

ஸ்டாலினுக்கு நான் சவால் விடுகிறேன். இதையெல்லாம் அவரால் எதிர்த்துப் பேச முடியுமா என்று பார்ப்போம். கருணாநிதி திறமைமிகு அரசியல்வாதி. அவரால் நல்லதும் செய்ய முடியும். கெட்டதும் செய்ய முடியும். மாநிலத்தில் சுயாட்சி என்றார். அதாவது சுய குடும்ப ஆட்சியைக் குறிப்பிட்டார். மத்தியில் கூட்டாட்சி என்றார். அதாவது சோனியா காந்தி குடும்பத்துடன் கூட்டாட்சியைக் குறிப்பிட்டார்.

அடுத்ததாக நம்ம ஸ்டாலினின் திராவிட மாடல். அவர் மாநிலத்தில் நலத்திட்டங்கள் வழங்கினால் திராவிட மாடல் ஆட்சி என்கிறார். 7.5% இட ஒதுக்கீடு வழங்கினால் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறுகிறார். இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஆட்சி கொண்டு செல்லப்படும் எனக் கூறிவிட்டு துபாய் சென்றுவிட்டார். துபாயில் லூலூ மாலின் உரிமையாளர் யூசுப் அலியுடன் ஒப்பந்தம் போடுகிறார். முதல்வருடன் அதிகாரிகள் செல்லவில்லை. ஆடிட்டர்கள் சென்றனர். ஆடிட்டர்கள் எதற்குச் செல்வார்கள் என்று எனக்குத் தெரியாதா?

ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் அவரை யாரும் புகழ்ந்து பேசக் கூடாது. அவரை அவர் மட்டுமே புகழ்ந்து பேசிக் கொள்கிறார். நம்பர் 1 முதல்வர் எனக் கூறுகிறார். உழைப்பின் அடையாளம் எனப் பேசுகிறார். இப்படியாக குடும்ப ஆட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது திமுக. திராவிட மாடல் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி.

குடும்ப ஆட்சியில் சிக்கிய கட்சிகள் தேனில் விழுந்த ஈ போல் பிழைக்காது. ஒவ்வொரு தலைமுறையும் கருணாநிதியாக முடியாது. இது காங்கிரஸுக்கும் பொருந்தும். ஒவ்வொரு தலைமுறையும் நேருவாகவும், இந்திராவாகவும் முடியாது.

காங்கிரஸ் கட்சி மோடியை எதிர்ப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டு தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்கிறது. மாறாக, காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பாஜக 1980-களில் காத்திருந்து கட்சியை வளர்த்தது. அதுபோல் கட்சியை வளர்க்க வேண்டும். ஒரு தேசிய கட்சியை கை நழுவவிடக் கூடாது.

இன்று மோடியை என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கும் ஊடகங்கள் ஏன் ஸ்டாலினை எதுவுமே விமர்சிப்பதில்லை. ஊடகங்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கண்மூடித்தனமான மோடி வெறுப்பு, கண்மூடித்தனமான ஸ்டாலின் ஆதரவு இரண்டுமே சரியானது அல்ல.

மத்திய அரசின் சாதனைகளாக நான் 5 விஷயங்களைப் பட்டியலிடுவேன். தடுப்பூசி தான் முதலிடம். உலகையே இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அடுத்தது பயங்கரவாத ஒழிப்பு. மூன்றாவது 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது. இதனை ரத்து செய்தால் 3,000 தலைகள் உருளும் என்றனர். ஆனால் அத்தனை அமைதியாக அது நிகழ்ந்துள்ளது. நான்காவதாக முத்தலாக் ரத்து. இதனால் மோடிக்கு முஸ்லிம் பெண்களின் வாக்குகள் கிடைத்துள்ளது. ஐந்தாவதாக ராமர் கோயிலை கட்டியது.

இதனால் மத்திய அரசை இன்று உலக நாடுகள் வியந்து பார்க்கின்றனர். ஜெர்மன் சேன்சலர் இந்தியாவை `சூப்பர் பவர்` எனக் கூறுகிறார். உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலைப்பாடு அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவரை இந்திய அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் அமெரிக்காவைக் கண்டு நடுங்கி வந்தன. அதனை மாற்றியமைத்தவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. அவருக்குப் பின்னால் யார் பிரதமராக வருவார்களோ என்று தான் மக்கள் கவலைப்பட வேண்டும்.

ஆனால் மத்திய அரசின் சறுக்கல்கள் என்னவென்றால் இந்தித் திணிப்பு, மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை, சிறுபான்மையினருக்கு எதிரானது போன்ற தன் மீதான குற்றச்சாட்டை சரி செய்ய எதுவுமே செய்யாதது. இந்தி உண்மையில் அவசியம். பாஜகவினர் அனைவருமே அதை ஆதரிக்க வேண்டும். அந்த விஷயத்தில் அண்ணாமலை பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை" என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x