Published : 07 May 2022 06:32 AM
Last Updated : 07 May 2022 06:32 AM

ஆகஸ்ட் மாதத்துக்குள் தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உதகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது. படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை: தமிழக அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர திட்டமிட்டுள்ளது என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 12-ம் தேதி நடக்கிறது. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று உதகை வந்திருந்தார். உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.

கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோர் பங்கேற்றனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 56 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 72 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 12-ம்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 37 லட்சத்து 50ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் அதிமுக ஆட்சி காலத்தில் 75 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் இருந்தது. அவர்களையும் சேர்த்து இது வரை 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்று ஒரே ஆண்டில் 4 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு ரூ.299 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆட்டோ ஓட்டும் 500 பெண்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் இறந்தால் வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களின் மகனோ அல்லது மகளோ திருமணம் செய்ய ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 91 தொழிற்பயிற்சி நிலையங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில், அவற்றில் உள்ள உபகரணங்கள், இயந்திரங்களை மேம்படுத்தி நவீனமயமாக்க ரூ.2,877கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 71 தொழிற்பயிற்சி நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. புதிதாக 11 தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x