Published : 06 May 2022 06:39 AM
Last Updated : 06 May 2022 06:39 AM

என்.எல்.சி. பணியாளர் தேர்வு முறையில் மாற்றம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: என்.எல்.சி. நிறுவனத்தில் பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு கேட் (GATE) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவை மாற்றிட வேண்டும் என்றுமுதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 300 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்களை கேட் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்திடஉத்தேசித்துள்ளது. இது கடந்தகாலங்களில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையிலிருந்து மாறுபட்டுள்ளது. கடந்த காலங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகளுக்காக நிலங்களை வழங்கியவர்களின் குடும்பத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது முன்னுரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது, என்.எல்.சி.-யின் சுரங்க நடவடிக்கைகளுக்கு நிலம்கணிசமான அளவிற்குத் தேவைப்படும் சூழ்நிலை உள்ளது. அவ்வாறு தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், நிலங்களை வழங்கும் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற நியாயமான கோரிக்கை உள்ளூர்மக்களிடையே எழுந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, என்.எல்.சி. நிறுவன சுரங்கப் பணிகளுக்காக நிலம் மற்றும் வீட்டுமனைகளை வழங்கியவர்களுக்கு, பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணியாளர்களைத் தேர்வுசெய்யும்போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், என்.எல்.சி. நிறுவனத்தில் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள பணி நியமனமானது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்ற திடீர் அறிவிப்பு, இந்த தேர்வை எழுதாத உள்ளூர் விண்ணப்பதாரர்களை பாதிப்படையச் செய்வதோடு, அவர்களுக்கான வாய்ப்பைப் பறிப்பதாக அமையும்.

எனவே, பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டும். தற்போதைய பணியிடங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின்போது, என்.எல்.சி. நிறுவனம் தகுதித் தேர்வைநடத்திட வேண்டும். அவ்வாறு பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, என்.எல்.சி. நிறுவனத்திற்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். இது குறித்து உரிய அறிவுரைகளை மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக இந்த கோரிக்கையைஅதிமுக, தவாக, பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x