Published : 29 May 2016 09:47 AM
Last Updated : 29 May 2016 09:47 AM

பள்ளி வாகனங்களில் ஆய்வு தொடக்கம்: 9 வாகனங்களுக்கு தகுதிச் சான்று மறுப்பு

சென்னையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. ஆய்வின்போது 9 வாகனங்களுக்கு எப்சி (தகுதி சான்று) மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு எப்சி வழங்கிய பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். அதன்படி, கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்புக் கருவிகள், முதலுதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் எப்சி வழங்கப்படாது.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 9 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) மூலம் 28, 30, 31-ம் தேதிகளில் சுமார் 1,800 பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் சுமார் 31 வாகனங்கள் அழைக்கப்பட்டு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இது தொடர்பாக திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அதிகாரி கருப்பசாமி கூறும்போது, ‘‘எங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் சுமார் 93 வாகனங்கள் உள்ளன. தற்போது, முதல்கட்டமாக 31 வாகனங்களில் ஆய்வு நடத்தியுள்ளோம். இதில், அவசரகால ஜன்னல், படிகள் பழுதாகி இருந்த வாகனங்கள் 9 வாகனங்களுக்கு எப்சி வழங்கப்படவில்லை. பழுதுகளை சரிசெய்த பின்னர் மீண்டும் ஆய்வு நடத்தி எப்சி வழங்கப்படும். மீதமுள்ள வாகனங்களில் நாளை (இன்று) ஆய்வு செய்யவுள்ளோம்’’ என்றார்.

இந்நிலையில், அயனாவரம், அண்ணாநகர், தண்டையார்பேட்டை, வள்ளலார் நகர், கொளத்தூர், கே.கே.நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் நாளையும், நாளை மறுநாளும் ஆய்வுசெய்ய முடிவெடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x