Published : 20 Jun 2014 10:30 am

Updated : 20 Jun 2014 11:16 am

 

Published : 20 Jun 2014 10:30 AM
Last Updated : 20 Jun 2014 11:16 AM

அடுத்த தலைமுறைக்கு வளமான விடியலைத் தேடும் ‘ஆக்கம்’: அறிவுஜீவிகளின் ஆக்கப்பூர்வமான சேவை

யாரிடமும் நிதி வாங்காமல், பெரிய அளவில் செலவும் செய்யாமல், உடல் உழைப்பையும் கற்ற அறிவையும் வைத்து, அடுத்த தலைமுறையை ஆக்கபூர்வமாக பட்டைத் தீட்டிக் கொண்டிருக்கிறது மதுரையிலுள்ள ’ஆக்கம்’ அமைப்பு.

மதுரையைச் சேர்ந்தவர் விஞ்ஞானி சங்கர். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து உருவாக்கியதுதான் ’ஆக்கம்’ அமைப்பு. 1995-க்கு முன்புவரை, பிளட் க்ரூப்பிங் பார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் யூஷன்கள் வெளிநாட்டிலிருந்துதான் தருவிக்கப்பட்டன. 95-ல் அந்த சொல்யூஷனை இந்தியாவிலேயே உருவாக்கித் தந்ததில் முக்கியப் பங்கு சங்கருடையது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஆய்வறிஞராக இருந்த இவர், இந்தியா வில் காசநோய், இருதய நோய்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளராகவும் இருந்தவர்.


இப்போது கிராமப்புறத்து மாணவச் செல்வங் களை வீரியம் கொண்ட விதையாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதுகுறித்து நம்மிடம் பேசினார் சங்கர். ’’ராஜஸ்தான் மாநிலத்தில் நான் பணியில் இருந்தபோது அங்குள்ள அடித்தட்டு மக்களின் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருந்தது. விஞ்ஞானம் மட்டுமே அவர்களை மேம்படுத்திவிடாது என்பதால் அந்த மக்களுக்காக வேலை செய்ய நினைத்தேன். ஆனால், ’இன்னும் கொஞ்ச நாளைக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டு அப்புறம் சமூக சேவைக்குப் போ’ என்று எனது வீட்டில் முட்டுக்கட்டை போட்டார்கள்.

இங்கே இருந்தால் திசைமாறி விடுவேன் என்பதற்காகவே, என்னை அமெரிக்காவுக்கு அனுப்பினார்கள். அங்கு பணிசெய்து கொண்டே இந்திய கிராமங்களில் இருக்கும் அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்தேன். நான்கே வருடத்தில் தமிழகம் திரும்பிவிட்டேன். பெரியவர்களுக்குப் பாடம் சொல்வதைவிட பள்ளிக் குழந்தைகளை பக்குவப் படுத்தினால் அடுத்த தலைமுறைக்கே நல்லதொரு விடியலைக் கொடுக்க முடியும் என்று நம்பினேன். அதற்காக கிராமத்துப் பள்ளிகளின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன்.

இப்போதெல்லாம், புத்திசாலி பிள்ளைகளாக இருந்தாலும் கணக்கும் ஆங்கிலமும் வரவில்லை என்றால் அவர்களை பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். இந்த அவலத்தை மாற்ற வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அதற்காக கிராமப்புற பள்ளிகளை தேடிப்போய் அந்தப் பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை கண்டுபிடித்தோம். அவர்களுக்காக ’கோடை கால முகாம்’களை நடத்தினோம்.

அந்த முகாம்களில் அந்த மாணவர் களை கூச்சமில்லாமல் பேசத் தயார்படுத்தினோம். முகாம்களில் ’மொபைல் லைப்ரரி’களை வைத்து அந்த மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டினோம். வாழ்க்கைக் கல்வியை கற்பதோடு மட்டுமில்லாமல் அந்த மாணவர்களை கேள்வி கேட்கவும் வைத்தோம்.

நிறைய பிள்ளைகள் விண்வெளியைப் பற்றியும் விலங்குகள், பறவைகளைப் பற்றியும்தான் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்பார்கள். அவர்கள் கேட்கும் அத்தனை கேள்வி களுக்கும் பதில் கொடுப்போம்.

எந்தச் சூழலிலும் இலவசங்களை எதிர்பார்க்கக் கூடாது என்பதும் அவர் களுக்கு நாங்கள் கற்றுக் கொடுக்கும் முக்கியப் பாடம். தெருக்களில் கிடக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனியாக பிரித்து எடுத்து எக்ஸ்னோராவிடம் ஒப்படைத்து அதற்காக அவர்கள் தரும் பணத்தில் மரக்கன்றுகளை வாங்கி பள்ளிகளில் நட்டு வளர்த்து வருகிறார்கள் எங்கள் மாணவர்கள். இவர்களுக்குள் இருக்கும் தனித் திறமைகளை கண்டுபிடித்து அந்தத் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான அத்தனை வழிகளையும் நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம்.

தமிழ்நாடு அறிவியல் இயக் கத்துடன் சேர்ந்து நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் இதுவரை 250 மாணவர்களுக்கு மேல் தங்களது கண்டுபிடிப்புகளுக்காக மத்திய அரசின் ’இளம் விஞ்ஞானி’ விருதை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

விரைவில் ’சயின்ஸ் பார்க்’ ஒன்றை அமைத்துக் கொடுத்து கிராமப்புற மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் தேடிக் கொடுப்பதுதான் எங்களது அடுத்த திட்டம்’’ மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் சங்கர்.


ஆக்கம்சமூக நல அமைப்புஅடுத்த தலைமுறைகல்விவழிகாட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x