Published : 03 May 2022 06:55 AM
Last Updated : 03 May 2022 06:55 AM

திருச்சி - கரூர் புறவழிச்சாலையில் வாகன ஓட்டிகளை பதம்பார்க்க காத்திருக்கும் சாலையோர இரும்பு தடுப்புகள்

திருச்சி- கரூர் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் சாலை ஓரத்தில் கழன்று அபாயம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இரும்பு தடுப்புக் கட்டைகள்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி: திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சாலையோரத்தில் உள்ள இரும்பு தடுப்புகள் கழன்று சாலையில் விழுந்து கிடப்பதை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருச்சி கோகினூர் திரையரங்கம் சந்திப்பிலிருந்து கரூர் சாலை(அன்பில் தர்மலிங்கம் சிலை) சந்திப்பு வரையிலான பகுதியை இணைக்கும் வகையில் கரூர் புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் கரூர் சாலையிலிருந்து கோகினூர் சந்திப்பு நோக்கி வரும் வழியில் ரயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விடாமல் இருக்க இரும்பாலான தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்புக்கட்டைகள் பல இடங்களில் அதன் தூண் இணைப்பிலிருந்து கழன்று சாலையில் கிடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனேயே இந்த பாலத்தில் பயணித்து வருகின்றனர்.

இவ்வழியாகச் செல்லும் போது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தால், சாலை ஓரத்தில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நின்று விடும். ஆனால் தடுப்புக் கட்டைகள் கழன்று கிடப்பதால் வாகனத்துடன் நேராக பாலத்தின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள பள்ளத்தில் விழ வேண்டிய அபாயம் உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

எனவே, கழன்று கிடக்கும் சாலை ஓரத் தடுப்புகளை மீண்டும் பொருத்தி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x