Published : 29 Apr 2022 11:52 AM
Last Updated : 29 Apr 2022 11:52 AM

திருவண்ணாமலை விசாரணைக் கைதி மரணம்: சிபிஐ விசாரணைக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓபிஎஸ்

சென்னை: திருவண்ணாமலை கிளைச் சிறையில் விசாரணைக் கைதியின் உயிரிழப்புக்கு காரணமான திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் காவல்துறையினர் சித்ரவதை செய்ததன் காரணமாக உயிரிழந்தார். அவருடன் கைது செய்யப்பட்ட சுரேஷ் பலத்த காயமடைந்தார். அதற்கான விசாரணை ஆரம்பித்திருக்கின்ற நிலையில், மேலும் ஒரு விசாரணைக் கைதி திருவண்ணாமலை கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தமிழக மக்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அப்பகுதியில் சாராய விற்பனை செய்வதாக கூறி 26-04-2022 அன்று அவரை காவல் துறையினர் விசாரணைக்கு திருவண்ணாமலை அழைத்துச் சென்றதாகவும், விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவருக்கு 27-04-2022 அன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டதாக காவல் துறையின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அன்று மாலையே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது நல்ல உடல் நலத்துடன் இருந்த தங்கமணி அதற்கு அடுத்த நாளே உயிரிழக்கிறார் என்றால் இந்த மரணத்தில் காவல் துறையினர் மீது சந்தேகம் ஏற்படுவது என்பது நியாயமான ஒன்றுதான். இந்த உயிரிழப்புக்கு காரணமான திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த தங்கமணிக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தங்கமணியை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதன் காரணமாகத்தான் அவர் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர் என்றும், இந்த மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்றபோது, காவல் துறையினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கதவுகளை மூடியதோடு, அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், காவல் துறையினர் தனது தந்தையிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதை தர மறுத்ததால் தனது தந்தையை அடித்தே கொன்று விட்டதாகவும் உயிரிழந்த தங்கமணியின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றம் இழைப்போரை கண்டறிந்து, விசாரணை நடத்தி, அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டியது காவல் துறையினரின் கடமை. இதை நான் மறுக்கவில்லை. அதே சமயத்தில் விசாரணை என்ற போர்வையில் உயிர் போகும் அளவுக்கு கடுமையாக தாக்கி, துன்புறுத்துவது என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது சட்டத்திற்கு புறம்பான செயல்.

ஒரு பக்கம் தங்கமணி என்பவர் சாராய விற்பனையில் ஈடுபடுகிறார் என்று கூறி அவரை விசாரணைக்கு காவல் துறையினர் அழைத்துச் செல்கின்றனர். மறுபுறம், அவரது மகன் காவல் துறையினர் தனது தந்தையிடம் இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுப்பதைக்கூட காவல் துறை தடுக்கிறது என்றும் கூறப்படுகிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காவல் துறையினரே தவறான பாதையில் செல்கின்றனரோ என்ற சந்தேகம் நடுநிலையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. காவல் துறையினர் மீதே சந்தேகப் பார்வை விழுகின்ற நிலையில், இதனை மாநிலக் காவல் துறை விசாரித்தால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காது.

எனவே, தமிழக முதல்வர் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், உயிரிழந்த தங்கமணியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x