Last Updated : 28 Apr, 2022 06:10 AM

 

Published : 28 Apr 2022 06:10 AM
Last Updated : 28 Apr 2022 06:10 AM

ஓடுதள பாதை, புல்வெளி மைதானம் அனைத்தும் இருந்தும் பாழாகும் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நீண்ட காலமாக ஆமை வேகத்தில் நடந்து வரும் தரை தளம் அமைக்கும் பணி.

புதுச்சேரி: புதுச்சேரி உப்பளத்தில் 1992-ம்ஆண்டு இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இங்கு தடகள வீரர்களுக்கு 400 மீட்டர் சுற்றளவுக்கு ஓடுதள பாதை, புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர கேலரி ஆகியவை அமைக்கப்பட்டது.

அத்துடன் கால்பந்து, கையுந்து பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி மைதானங்களும் தனித்தனியாக அமைக்கப்பட்டன. புல்வெளி மற்றும் இதர மைதானங்களை பராமரிக்கும் பணியில் பாசிக் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் புல்வெளியில் தண்ணீர் அடிப்பது, தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ரூ. 80 லட்சத்தில் பிரமாண்ட மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளும் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.

ஸ்டேடியத்தில் 27 பல்நோக்கு பணியாளர்கள் இருக்கும்போதே பாசிக் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதை மத்திய தணிக்கைக்குழு அனுமதிக்க மறுத்தது.

இதைத் தொடர்ந்து பல்நோக்குஊழியர்கள் ஸ்டேடியத்தைபராமரிக்க தொடங்கினர்.

பிரதமர் அடிக்கல் நாட்டி 14 மாதங்களாகின்றன

கடந்தாண்டு பிப்ரவரியில் புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் 400 மீட்டர் சிந்தடிக் தடகள ஓடுகளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அவர் அடிக்கல் நாட்டி 14 மாதங்களாகியும் இப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.

விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் மற்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, "பிரதமர் மோடி புதுச்சேரிக்கு விளையாட்டுத் துறைக்கு பல திட்டங்களை அறிவித்துள்ளார். இங்குள்ள அரசும், அதிகாரிகளும் அதை செயல்படுத்துவதில் ஆர்வமே காட்டவில்லை.

குறிப்பாக சிந்தடிக் தடகள ஓடுகளம் ரூ. 7 கோடியிலும், நீச்சல் குளம் ரூ. 5 கோடியிலும் கட்ட மத்திய அரசு நிதி தர முடிவு எடுத்தது. ஆனால், இப்பணிகளின் குளறுபடி நிலவுகிறது. முதல்கட்ட பணிகளை முடிக்காத நிலையில்,மத்திய அரசிடம் இருந்து அடுத்தக்கட்ட நிதியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி ஸ்டேடியத்தில் சிந்தடிக் தடகள ஓடுகளம் பணியை ஒப்படைப்பதிலும் குளறுபடி ஏற்பட்டு, தற்போது வட இந்திய நிறுவனத்திடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்பாட்டால் நிதி கிடைப்பதில் சிக்கல் உள்ளதால் இப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் சிந்தடிக் டிராக், சிந்தடிக் விளையாட்டு திடல்கள் உள்ளன” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். அவர்கள் அப்பணியை சரிவர மேற்கொள்ளாததால் பசுமையாக இருந்த மைதானம் மோசமான நிலைக்கு மாறியது. அழகான ஸ்டேடியம் தற்போது செடிகொடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாமல் மோசமான நிலையில் உள்ளது.

பொதுமக்கள் ஏராளமானோர் இங்கு நடைப்பயிற்சிக்கு வருகின்றனர். விளையாட்டு பயிற்சிக்கு சிறுவர், சிறுமியர் தொடங்கி இளையோர் ஏராளமானோர் நாள்தோறும் வருகின்றனர்.

பல கோடி வீண்

விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பயிற்சி பெறும் சிறார்களின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், "தற்போது ஸ்டேடியமே பராமரிப்பி்ல்லாமல் உள்ளது. பராமரிப்பில்லாததால் செயற்கை புல்வெளி ஹாக்கி திடல் மோசமாகி, அதற்கென ஒதுக்கப்பட்ட பல கோடி வீணாகி விட்டது.

கால்பந்து, ஹாக்கி, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுக்கு சிந்தடிக் திடல்கள் இல்லை. மண்ணில் விளையாடுவதால் வீரர்களின் ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது.

இதனாலேயே புதுச்சேரியில் இருந்து செல்வோர் தேசிய அளவில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ஸ்டேடியத்தில் கழிவறை, குடிநீர் வசதி சரியாக இல்லை. அதிகளவில் பெண்கள், மாணவிகள் பயிற்சிக்காவும், நடைபயிற்சிக்கும் வருகின்றனர். முதலில் கழிவறையை சரி செய்ய சொல்லுங்கள். சுத்திகரிப்பட்ட குடிநீர் வசதியும் கண்டிப்பாக தேவை" என்கின்றனர்.

புதுச்சேரியில் கல்வித்துறையின் கீழ் விளையாட்டுத் துறை உள்ளது. அதனால் விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்குவதிலும் சிக்கலும் பற்றாக்குறையும் உள்ளது.

விளையாட்டுக்கென தனித் துறை அமைப்பதாக ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனரே தவிர அதை நடை முறைப் படுத்துவதில்லை.

விளையாட்டுக்கு தனித்துறை அமைத்தால்தான் இப்பிரச் சினைகள் தீரும் என்ற கருத்தும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x