Published : 06 May 2016 07:15 AM
Last Updated : 06 May 2016 07:15 AM

சென்னையில் இன்று மோடி பிரச்சாரம்

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற் காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தமிழகத்தில் 6, 8, 11 ஆகிய 3 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். முதல்கட்டமாக இன்று பகல் 1.15 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை வரும் மோடி, அங்கிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் கோவை திரும்பும் அவர், மாலை 4.15 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு செல்கிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஓசூர் வருகிறார். அந்திவாடி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். ஓசூர் பொதுக்கூட்டம் முடிந்ததும் பெங்களூரு திரும்பும் மோடி, அங்கிருந்து தனி விமானத்தில் மாலை 6.30 மணிக்கு சென்னை வருகிறார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் (விருகம்பாக்கம்), எச்.ராஜா (தியாகராய நகர்) உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இரவு 8.30 மணி அளவில் தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘‘பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு மேலும் பலம் சேர்க்கும். மோடியின் வருகையால் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகு அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும்’’ என்றார். பிரதமர் மோடியின் வருகையை யொட்டி ஓசூர், சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு வருமாறு தமிழ், ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி மூலம் லட்சக்கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் 8-ம் தேதி தமிழகம் வரும் மோடி கன்னியாகுமரி யிலும், 11-ம் தேதி வேதாரண்யத்திலும் பிரச்சாரம் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x