Published : 27 Apr 2022 11:24 AM
Last Updated : 27 Apr 2022 11:24 AM

தஞ்சை தேர் விபத்து: அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: தஞ்சை தேர் விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்த வெளியிட்டுள்ள அறிக்கையில்," தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் (நேற்று ) இரவு, அப்பர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது தேர் பவனி நடத்தப்பட்ட நேரத்தில், தேரின் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்திருக்கிறோம். இந்த வேதனைக்குரிய சம்பவத்தில் மேலும் 15 பேர் தீக்காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று
வருவதும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஓர் இனிய ஆன்மிக நிகழ்வில் களிமேடு கிராம மக்களுக்கு இவ்வாண்டு மாபெரும் துயரம் ஏற்பட்டிருப்பதை சொற்களால் விவரிக்க இயலாது.

இந்த சோக சம்பவத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனப் பிரார்த்திக்கிறோம்.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இத்தனை பெரிய துயரத்தை சந்தித்திருக்கும் களிமேடு கிராம மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் தமிழ்நாடு அரசு விரைந்தும், முழுமையாகவும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள 11 பேரின் குடும்பங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும்; அதே போல், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x