Published : 23 Apr 2022 06:58 AM
Last Updated : 23 Apr 2022 06:58 AM

இலங்கையில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி: கர்ப்பிணி, குழந்தைகள், முதியவர்கள் உட்பட 18 பேர் படகுகளில் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இலங்கை தமிழர்கள். படம்: எல்.பாலச்சந்தர்

ராமேசுவரம்: இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் குழந்தைகள், கர்ப்பிணி, முதியவர்கள் உட்பட 18 பேர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடிக்கு படகுகளில் வந்தனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரிப்பால் பெட்ரோல், காஸ் சிலிண்டர், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் இலங்கையில் இருந்துதனுஷ்கோடி வந்த 42 தமிழர்கள் அகதிகளாக மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தலைமன்னார் கடற்கரையில் இருந்து மன்னார்மாவட்டம் அடம்பன் வண்ணங்குளத்தைச் சேர்ந்த நகுலேஸ்வரன் (48), மனைவி ஈஸ்வரி(42), அவர்களது குழந்தைகள் தனுஷ்(17),வினு(17) பானுசன்(15), யதுர்ஸிகா(12), மிதுலன்(8) மற்றும் நகுலேஸ்வரனின் மூத்த மகன்நதுஷன்(21) அவரது மனைவி பியோனா(21) ஆகிய 9 பேரும்,மன்னார் உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரதீப்(30), அவரது மனைவி கஸ்தூரி(29), அவர்களது2 குழந்தைகள் சுஸ்மித்ரா(4) சஸ்மித்ரா(2) ஆகிய 4 பேர் உட்பட 13 பேர் 2 பைபர் படகுகளில் நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.தகவலறிந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்ற மெரைன் போலீஸார், அவர்களை மீட்டு மண்டபம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதுடன், மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் கர்ப்பிணியான தனது மனைவிக்கு பாதுகாப்பாக குழந்தை பிறப்பதற்காக அகதிகளாக வந்ததாக நதுஷன் என்பவர் தெரிவித்தார்.

இதேபோல் யாழ்ப்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த கிட்டம்மாள் (81), அவரது மகன் அந்தோணிச்சாமி(58), மனைவி நாகேஸ்வரி(53), மகன்பிரவின் டேனியல்(19), மேலும்நீர்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (72) ஆகிய 5 பேர் தலைமன்னார் கடற்கரையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி அருகே சேராங்கோட்டை பகுதியில் நேற்று அதிகாலை வந்து சேர்ந்தனர்.

விசாரணைக்குப் பின்னர் 18 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் மண்டபம் அகதிகள் முகாம்துணை ஆட்சியர் எஸ். சிவக்குமாரி விசாரணை நடத்தினார்.

கடந்த ஒரு மாதத்தில், இலங்கையில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x