Published : 23 Apr 2022 06:02 AM
Last Updated : 23 Apr 2022 06:02 AM

உதகை நகரம் உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவு | நீலகிரியில் ரூ.500 கோடியில் வளர்ச்சி பணிகள்: ஆ.ராசா தகவல்

உதகை: உதகை, குன்னூரில் மேம்பாலங்கள், பைபாஸ் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பல்வேறு துறைகள் மூலமாக ரூ.500 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.

உதகை நகரம் உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், உதகையிலுள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.நீலகிரி எம்.பி. ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

உதகை நகரம் உதயமாகி 200ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழக அரசு ஒதுக்கிய சிறப்பு நிதி ரூ.10 கோடி மூலமாக எத்தகைய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது என அதிகாரிகள் மற்றும்தன்னார்வலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில் ஆ.ராசா எம்.பி. பேசும்போது, ‘‘உதகை உதயமாகி 200ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2022 ஜூன் முதல் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

புதிதாக இணையதளம் உருவாக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம்சார்பில் ஜான் சலீவனின் வாழ்க்கை வரலாறு மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உதகையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக ஜான் சலீவனின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வனம்,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஆகிய துறைகளின் மூலமாக, இந்த ஓராண்டு காலத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் பல்வேறுவளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "உதகையில்நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியில் தமிழக முதல்வர் பங்கேற்பதோடு, உதகை 200 ஆண்டுகள் விழாவின் நிறைவு விழாவிலும் கலந்துகொள்கிறார்’’ என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, சிறப்பு மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மோனிகா ராணா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x