Published : 22 Apr 2022 12:37 PM
Last Updated : 22 Apr 2022 12:37 PM

குதிரையேற்ற சாம்பியன்ஷிப்பில் வாகைசூடிய தமிழக காவல்துறை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 40-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழக காவல்துறை வீரர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 40-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழக காவல்துறை வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (ஏப்.22) தலைமைச் செயலகத்தில், சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ஹரியானா மாநிலம், பஞ்சகுலா மாவட்டத்தில் 31.3.2022 முதல் 11.4.2022 வரை 40-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையைச் சேர்ந்த 18 குழுக்கள் பங்கேற்றன.

இப்போட்டிகளில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த முதுநிலை காவலர் மணிகண்டன் 2 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம், 1 வெண்கலப் பதக்கம், டிஜிபி ராஜஸ்தான் கோப்பை மற்றும் ஜெய்ப்பூர் சவால் கோப்பையும்; முதுநிலை பெண் காவலர் சுகன்யா 1 தங்கப் பதக்கம், பீகார் முதல்வர் கோப்பை மற்றும் சிறந்த பெண் குதிரையேற்ற வீரர் கோப்பையும்; குதிரை பராமரிப்பாளர் தமிழ்மணி Farrier போட்டியில் வெள்ளிப் பதக்கமும்; முதுநிலை காவலர் மகேஸ்வரன் Police Horse Test போட்டியில் நான்காம் இடமும் பெற்றுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் குதிரைப்படையின் வரலாற்றில் முதன் முறையாக 2018-ம் ஆண்டு குதிரையேற்ற அணி (Equestrian Team) உருவாக்கப்பட்டது. அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழக காவல்துறை குதிரையேற்ற அணி பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். முப்பது - நாற்பது ஆண்டுகளாக இப்போட்டிகளில் கலந்து கொண்ட அணிகளை வெற்றி கொண்டு,தமிழக காவல்துறை அணி பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 3 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் தமிழக அரசின் சார்பில் பரிசுத் தொகையாக விரைவில் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x