Published : 21 Apr 2022 04:41 AM
Last Updated : 21 Apr 2022 04:41 AM

காவல்துறையில் 90 சதவீதம் அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்ற தனி நீதிபதியின் கருத்து நீக்கம் - உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

சென்னை: தமிழக காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் கருத்தை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் நாமக்கல் மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தங்களது குடும்பச் சொத்தை நடேசன், ராஜவேலு ஆகியோர் போலி ஆவணங்கள் மூலமாக மோசடியாக விற்பனை செய்துள்ளதாகக் கூறி, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், வசந்தி அளித்த புகார் உண்மைக்குப் புறம்பானது எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர். அதை எதிர்த்து வசந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மறுவிசாரணை செய்து 3 மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என கடந்த 2021 மார்ச் 16 அன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி போலீஸார் மீண்டும் இந்த வழக்கை விசாரித்து, புகார் உண்மைக்குப் புறம்பானது எனக் கூறி திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி உரிய காலக்கெடுவுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும், போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என்றும் கூறி வசந்தி, உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை கடந்த ஜனவரியில் விசாரித்த தனி நீதிபதி, ‘‘கரோனா காலகட்டம் என்பதால் தாமதமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நேரிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் நிறைவேற்றியிருந்தாலும், தற்போது தமிழக காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர். எஞ்சிய 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமைசாலிகளாகவும் உள்ளனர்.

எனவே காவல்துறையில் உள்ள ஊழல்வாதிகளைக் களைந்து திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது’’ என தனது உத்தரவில் குறிப்பிட்டு அந்த வழக்கை முடித்து வைத்திருந்தார்.

தனி நீதிபதியின் இந்த கருத்து, ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும், எனவே தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள இந்த பகுதியை மட்டும் நீக்க வேண்டும் எனக் கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. தமிழக டிஜிபி தரப்பி்ல் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ‘‘தனி நீதிபதி தனது உத்தரவில் 90 சதவீத காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகள், திறமையற்றவர்கள் என வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு தெரிவித்துள்ளார்.

உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு இதுபோன்ற உத்தரவு மிகுந்த வருத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை நீதிபதிகள் தெரிவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள அந்த கருத்துகளை நீ்க்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள காவல்துறை அதிகாரிகள் பற்றிய அந்தப் பகுதியை மட்டும் நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x