Last Updated : 05 May, 2016 10:28 AM

 

Published : 05 May 2016 10:28 AM
Last Updated : 05 May 2016 10:28 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் நுழைவுத் தேர்வு விவகாரம்: மாணவர்கள் பாதிக்காதவாறு முடிவு- இந்திய மருத்துவ கவுன்சில் உறுதி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் நுழைவுத் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் துணைத் தலைவர் சி.வி.பிரம்மானந்தம் தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ரத்து செய்யக்கோரி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மேல் முறை யீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 5-ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்படுகிறது” என்று தெரிவித் தனர்.

இந்நிலையில் அரசு டாக்டர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) பொதுச் செயலாளர் டாக்டர் பி.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம், மாணவர்கள் மற்றும் பெற்றோர், இந்திய மருத்துவக் கவுன்சில் துணைத் தலைவர் சி.வி.பிரம்மானந்தத்தை நேற்று சந்தித்தனர். அப்போது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்தனர்.

ரத்து செய்ய கோரிக்கை

இந்த சந்திப்பு பற்றி டாக்டர் ஏ.ராமலிங்கத்திடம் கேட்டபோது, “நாடு முழுவதும் பல்வேறு கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற முடியும். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். கிராமப்புற மாணவர்களின் டாக்டராகும் கனவு தகர்ந்துவிடும்.

அதனால், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தோம். எங்களுடைய கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டார். இதேபோல் மத்திய அரசும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்றார்.

நல்ல முடிவு எடுக்கப்படும்

இது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் துணைத் தலைவர் சி.வி.பிரம்மானந்தத்திடம் கேட்டபோது, “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் மாண வர்களும், பெற்றோர்களும் பாதிப் படைந்துள்ளனர். இதை புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயமாக மாணவர்கள் பாதிப்படையாமலும், மாணவர்களின் நலனில் அக்கறை யுடனும் நல்ல முடிவை எம்சிஐ எடுக்கும். நுழைவுத்தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டு வந்த பிறகு நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவிக்க இருக்கிறோம்” என்றார்.

இரண்டாம்கட்ட தேர்வு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த 1-ம் தேதி நாடு முழுவதும் முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தியது. தமிழகத்தில் 22,750 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 6.40 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் சுமார் 8 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதாத மாணவர்களாக இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x