Published : 20 Apr 2022 08:19 PM
Last Updated : 20 Apr 2022 08:19 PM

நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு 25,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: சட்டப்பேரவையில் 10 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: நடப்பு நிதியாண்டில் நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு, தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, நகர்ப்புரங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைக் குடும்பங்களுக்கு 25,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்தல், சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 40,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் புனரமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். அவர் வெளியிட்ட10 முக்கிய அறிவிப்புகள்:

> நடப்பு நிதியாண்டில் நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு, தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும்.

> நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

> மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1200 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்படும்.

> குடியிருப்பு திட்டப் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நல்ல முறையில் பேணிக்காத்திட கொண்டு வரப்பட்ட "நம் குடியிருப்பு நம் பொறுப்பு" திட்டத்தினை திறம்பட செயல்படுத்த குடியிருப்போர் நலச்சங்கங்கள் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.

> குடியிருப்புதாரர்கள் உடனடியாக பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் மூன்று மாத பராமரிப்புத் தொகை அரசு பங்களிப்பு நிதியிலிருந்து முன்பணமாக செலுத்தப்படும்.

> அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டப் பகுதிகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்புப் பணியினை திறம்பட செயல்படுத்திட தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தனி பராமரிப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

> சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 40,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

> குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையினை இணையதள செயலி மூலம் குறித்த காலத்திற்குள் சுலபமாக செலுத்த வழிவகை செய்யப்படும்.

> பயனாளிகள் திறன் மற்றும் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யும் வகையில் பல்வேறு தரைப்பரப்பளவு கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

> அரசு மற்றும் அரசுத்துறை வீட்டுவசதி நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் முதலீடு குறித்த முடிவுகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, வீட்டுவசதித் துறை குறித்த மேம்படுத்தப்பட்ட தகவல்களை அளிக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x