Published : 20 Apr 2022 09:14 PM
Last Updated : 20 Apr 2022 09:14 PM

2 மணி நேரத்தில் சென்னை டு மதுரை... இந்தியாவில் புல்லட் ரயில் சாத்தியங்களும் திட்டங்களும்!

சென்னை: புல்லட் ரயில் என்று கூறப்படும் அதிக வேக ரயில் மூலம் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது பயணிகள் ரயில், விரைவு ரயில், அதி விரைவு ரயில், துராந்தோ, ராஜத்தானி, சம்பர்கிராந்தி, தேஜஸ், வந்தே பாரத் உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிகபட்சமாக வந்தே பாரத் விரைவு ரயில் சேவை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ரயில் சேவை டெல்லி - வாரணாசி இடையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் அதிக வேக ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி முதல் கட்டமாக மும்பை - அகமதாபாத் இடையிலான செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த தேசிய அதிவிரைவு ரயில் கழகம் அமைக்கப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

எப்படி இருக்கும் அதிவேக ரயில்?

புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் அதிக வேக ரயில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதாவது 508 கிலோ மீட்டர் கொண்ட தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கும் வகையில் இந்த ரயில் பெட்டிகள் வடிவடிமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சுரங்கம், மேம்பாலம், கடலுக்கு அடியில் என்று அனைத்து பகுதிகளிலும் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டம் மும்பை முதல் ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே செயல்படுத்தப்படுகிறது. ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்புடன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் 508 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மும்பையில் பாந்திரா - குர்லா முதல் பொய்சர் வரை 21 கி.மீ தூரத்திற்கு சுரங்க பாதையில் ரயில் பயணிக்க உள்ளது. இதில், 7 கி.மீ. தூர வழித்தடம் கடலுக்கு அடியில் அமைய உள்ளது.

— Ministry of Railways (@RailMinIndia) February 22, 2022

சென்னை - மைசூரு புல்லட் ரயில் திட்டம்

இந்தியாவில் மொத்தம் 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி டெல்லி - வாரணாசி, டெல்லி - அகமதாபாத், மும்பை - நாக்பூர், மும்பை- ஐதராபாத், டெல்லி - அமிர்தசரஸ், வாரணாசி - ஹவுரா, சென்னை - மைசூரு இடையில் புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னை - மைசூரு இடையில் 435 கி.மீ நீளத்திற்கு இந்த ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு 2 மணி நேரம்

தமிழகத்தில் அதிவேக ரயில் அமைப்பதற்கான பாதைகளை கண்டறிவதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை நடத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்திய ரயில்வே உடன் இணைந்த இந்த ரயில் தடங்களை நிறுவன தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னை - மதுரை இடையிலான தூரத்தை 2 மணிக்கு நேரத்தில் கடக்க முடியும் என்று நகர்புற வளர்ச்சி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ரயில் தடத்தை எந்த நகரங்களுக்கு இடையில் அமைக்க வேண்டும் என்ற உங்களின் பரிந்துரை கருத்துப் பகுதியில் தெரிவிக்கலாமே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x