Published : 20 Apr 2022 08:11 AM
Last Updated : 20 Apr 2022 08:11 AM

மாணவர்கள் சேர ஆர்வம் குறைவு; பாலிடெக்னிக்குகளில் 1.10 லட்சம் இடங்கள் காலி: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரமாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பேசிய உதகமண்டலம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.கணேஷ், தொகுதியில் உள்ள மஞ்சூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதேபோல, கூடலூர் தொகுதிஅதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் 2003-ம் ஆண்டு தொடக்கப்பட்ட கல்லூரி, 2019-ல் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அக்கல்லூரியில் தாவரவியல், விலங்கியல், தமிழ்உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தொடங்கவேண்டும் என்றும் கோரினார்.

பண்ருட்டி தொகுதியில், அரசுகலை, அறிவியல் கல்லூரி தொடங்குவது தொடர்பாக உறுப்பினர் தி.வேல்முருகன் (தவாக) கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

ஏற்கெனவே உதகமண்டலம் தொகுதியில் தலா ஒரு அரசுமற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் உள்ளன. எனவே, மஞ்சூரில் தேவையில்லை. இதுதவிர,தமிழகத்தில் தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விரும்புவதில்லை. ஏற்கெனவே அங்கு இருக்கும் 2 கல்லூரிகளில் உள்ள 750 இடங்களில் 265 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

மேலும், தமிழகத்தில் உள்ள மொத்த பாலிடெக்னிக் இடங்கள் 1,67,616. இதில், 56,801 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. எஞ்சிய 1,10.815 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையை போக்கத்தான், ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை முதல்வர் தொடங்கியுள்ளார். இதன்மூலம் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

இதுதவிர, தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 16 கல்லூரிகள், இந்த ஆண்டு 10 கல்லூரிகள் என அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு கல்லூரி கூட இல்லாத தொகுதிக்கு கல்லூரியை வழங்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம்.

கல்லூரிகளி்ல் தேவைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10 கல்லூரிகளில் புதிதாக பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பு தொடங்கப்பட உள்ளது. பல்வேறு கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x