

மாநிலங்களவைக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதிமுக அரசில் முன்பு அமைச்சராக இருந்தபோது தொடரப்பட்ட சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் டி.எம்.செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து மாநிலங் களவையில் தமிழகத்தின் சார்பில் ஒரு இடம் காலியானது. இந்த காலி இடத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அரசுத் தலைமை வழக்கு ரைஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் போட்டி யிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை இரவு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக-வுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளதால், வரும் 3-ம் தேதி பெரும்பாலும் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மற்ற கட்சி கள் வேட்பாளரை நிறுத்தாது என்றே தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, மாநிலங் களவையில் அதிமுக-வின் பலம் 11 ஆக அதிகரிக்கிறது. திமுக-வின் பலம் நான்காக குறைந்துள்ளது. செல்வகணபதியின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருந்தது. வரும் 3-ம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி, இன்னும் 2 ஆண்டுகாலமே பதவியில் நீடிக்க முடியும்.