Published : 17 Apr 2022 04:19 AM
Last Updated : 17 Apr 2022 04:19 AM

சென்னை தீவுத்திடலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் - ‘கோவிந்தா... கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவத்தைக் காண பக்திப் பரவசத்துடன் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். படங்கள்: ம.பிரபு

சென்னை: சென்னை தீவுத்திடலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை தீவுத்திடலில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008-ம்ஆண்டு ஏப்.6-ம் தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கண்ணைக் கவர்ந்த மேடை

இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், சென்னை தீவுத்திடலில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி கோயில் கோபுரம் போன்று திருக்கல்யாண வைபவ மேடை, தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. தீவுத்திடல் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் சிலைகளும், 40 பட்டாச்சாரியார்களும் 100 வேத பண்டிதர்களும் வந்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்தைக் காண நேற்று மாலை 4 மணி முதலே தீவுத்திடலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மாலை 5 மணி முதல் 5.30 வரை வேதபாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், அன்னமய்யாவின் பாடல்கள் பாடப்பட்டன. இதையடுத்து, மாலை 6.45 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் தொடக்க உரை நிகழ்த்தினார். இதை தொடர்ந்து, மேடையில் திரை விலக்கப்பட்டது.

அப்போது, திருமலை திருப்பதி தேவஸ்தான மூலஸ்தானத்தில் இருப்பதை போன்று வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி, ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் காட்சியளித்தனர். இதைக் கண்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் எழுந்து நின்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, மங்கள இசை முழங்க ஆன்மிகப் பாடல்கள் பாடப்பட்டன.

தொடர்ந்து, புனித நீர் தெளிக்கப்பட்டு ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்குஅர்ச்சகர்கள் காப்பு கட்டினர். பின்னர், நவதானிய பூஜை, அக்னி பிரதிஷ்டை நடைபெற்றது. தேன், வெல்லம், பழ வகைகள் சுவாமிக்கு படைக்கப்பட்டன. இதையடுத்து, ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டது.

‘கோவிந்தா... கோவிந்தா..’ முழக்கம்

இரவு 8.30 மணியளவில் மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. பின்னர், உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு திருமாங்கல்யத்தை அணிவித்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று பக்தி முழக்கங்களை எழுப்பினர்.

விண்ணை முட்டும் பக்தி முழக்கத்துடன் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு பெருமாள், தாயாருடன் உலா வந்து அருள்பாலித்தார்.

திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற லட்டு, ஒரு ஆப்பிள் உள்ளிட்ட பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே.எஸ்.ஜவகர் ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக ஆங்காங்கே 16 பெரிய திரைகளில் கல்யாண வைபவம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x