Published : 17 Apr 2022 04:40 AM
Last Updated : 17 Apr 2022 04:40 AM

2 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் - `கோவிந்தா...கோவிந்தா' முழக்கத்துடன் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடந்தது. பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார். அப்போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா...' முழக்கமிட்டு கள்ளழகரை தரிசித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், தீர்த்தத்துடன் நேற்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மதுரை அருகே உள்ள அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.12-ம் தேதி தொடங்கியது. ஏப்.14-ம் தேதி மாலை அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் கோலத்தில் மதுரைக்குப் புறப்பட்டார். ஏப்.15-ல் மதுரை மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் எதிர்சேவை நடைபெற்றது. அன்று இரவு 9.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடந்தது.

தங்கப் பல்லக்கில் வந்த கள்ளழகர் சனிக்கிழமை அதிகாலை 12 மணிக்கு மேல் தங்கக்குதிரை வாகனத்துக்கு மாறி ஆயிரம் பொன் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து அருள்பாலித்தார்.

கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளழகர் ஆற்றில் இறங்குவதால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆறு பகுதியில் திரண்டிருந்தனர். வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்துச் சென்றது. ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் மலர்கள் நிரப்பப்பட்டிருந்தன.

நேற்று காலை 6.10 மணியளவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டு கள்ளழகரை தரிசித்தனர்.

வைகை ஆற்றில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் சார்பில் மண்டகப்படி அமைக்கப்பட்டிருந்தது. அங்கு காத்திருந்த வீரராகவப் பெருமாள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றார். மண்டகப்படியில் கள்ளழகருக்கு சிறப்புப் பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் காலை 7.25 மணி அளவில் வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் புறப்பட்டார். அங்கிருந்து மதிச்சியம் ராமராயர் மண்டபத்துக்கு பகல் 12 மணியளவில் வந்தார். அப்போது கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் தோல் பைகள் மூலம் தண்ணீர் பீய்ச்சிட தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் அண்ணா நகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலை இரவு வந்தடைந்தார்.

இதையடுத்து இன்று காலை 9 மணி அளவில் சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இரவு 11 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் விடியவிடிய தசாவதாரம் நடைபெறுகிறது.

ஏப்.18-ம் தேதி பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருள்கிறார். இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை வந்தடைகிறார். ஏப்.19-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்துடன் தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயில் செல்கிறார். அங்கு வையாழி முடிந்தது மீண்டும் இருப்பிடம் நோக்கி புறப்படுகிறார்.

ஏப்.20-ல் அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக அழகர்கோவில் மலைக்கு சென்றடைகிறார். ஏப்.21-ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவடைகிறது.

தண்ணீர் பீய்ச்சிய பக்தர்கள்

கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடக்காததால் கள்ளழகரை தரிசிக்க வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் திரண்டனர். வைகை ஆற்றிலிருந்து ராமராயர் மண்டகப்படிக்கு திரும்பிய கள்ளழகர் மீது நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் சுற்றிலும் நின்று நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கள்ளழகர் ஆற்றில் இறங்கி, ராமராயர் மண்டகப்படிக்கு புறப்பட்டு சென்றவுடன் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்தினர்.

மதுரை மக்களும், சுற்று வட்டாரக் கிராமத்தினரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வந்திருந்து கள்ளழகர் வரும் வழியில் உற்சாகமாகத் திரண்டிருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர் மோர், பானகம், குளிர்பானம் உள்ளிட்ட உணவு வகைகளும் வழங்கப்பட்டது. கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தால் போலீஸார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழப்பு

அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாததால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் திரண்டனர். கள்ளழகர் வரும்போது ஏராளமானோர் கோரிப்பாளையம் வழியாக வைகை ஆற்றுக்கு செல்ல முயன்றனர்.

கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே அதிகாலை 6 மணியளவில் வந்த கள்ளழகரை பக்தர்கள் தரிசித்தபோது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் 10 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்வம் (47), மதுரை செல்லூர் நாகக்கன்னிகோவில் தெருவைச் சேர்ந்த ஜெயலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காயம் அடைந்தவர்களை அமைச்சர்கள் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, சு.வெங்கடேசன் எம்பி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். நெரிசலுக்கான காரணம் குறித்து போலீஸாரும், வருவாய்த் துறையினரும் விசாரிக்கின்றனர்.

இந்த விபத்து குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இத்துயர சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x