Published : 16 Apr 2022 10:02 AM
Last Updated : 16 Apr 2022 10:02 AM

மதுரை வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி; பலர் காயம்: ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு

மதுரை: மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் அழகர் இறங்கினார். காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் ஆற்றில் இறங்கினர்.

இந்நிலையில் கூட்டநெரிசலில் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ஒரு பெண் உள்பட இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரது உடல்களும் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் 40 வயதுக்கும் மேல் மதிக்கத்தக் ஆண், மற்றொருவர் பெண். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெறுகின்றன.

ஹெல்ப் லைன் அறிவிப்பு...

இதற்கிடையில், கூட்ட நெரிசலில் சிக்கி யாரேனும் உயிரிழந்திருந்தால் பொதுமக்கள் 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நெரிசலில் சிக்கி உறவினர்கள் தொலைந்து போயிருந்தாலும் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்று தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டாண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக மதுரை சித்திரைத் திருவிழா பக்தர்களின் பங்கேற்பு இல்லாமல் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதால் முன்பு எப்போதையும் விட பலமடங்காக மக்கள் கூட்டம் அதிகரித்து கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x