Published : 03 Apr 2014 12:00 AM
Last Updated : 03 Apr 2014 12:00 AM

கிரிக்கெட் சூதாட்ட செய்திகளை வெளியிடுவது ஊடகங்களின் கடமை: தோனி தொடர்ந்த வழக்கில் ஜீ சேனல் பதில்

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான செய்திகளை வெளியிடுவது ஊடகங்களின் கடமை என்று ஜீ தொலைக்காட்சி நிறுவனம் கூறியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் தனக்கு தொடர்பு உள்ளதாக கூறியதற் காக ஜீ தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் தனக்கு ரூ.100 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கூறி இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன்னிலையில் புதன்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது ஜீ தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி முட்கல் தலைமையில் உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் முன் வாக்குமூலம் அளித்த ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான ஏராளமான தகவல்களைக் கூறியுள்ளார். அவரது இந்த வாக்குமூலம் தொடர்பாக பல ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

இந்த சூழலில் ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருடன் நடத்திய உரையாடலை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து எங்கள் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பினோம். தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில்தான் அதனை எங்கள் நிறுவனம் ஒளிபரப்பியது. ஐ.பி.எல். சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் எந்தக் கருத்தையும் கூறவில்லை.

இந்தியாவின் தேசிய விளையாட்டாகக் கருதப்படும் கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய நிலை குறித்தும், கிரிக் கெட் சூதாட்டத்துக்கு காரணமான நபர் கள் குறித்தும் அறிந்து கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. இந்த பிரச்சினையின் தீவிரம் குறித்து உச்ச நீதிமன்றம் பல கருத்துகளை கூறியுள்ளது.

இந்த சூழலில் தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை குறித்து விவாதிப்பதும், அது தொடர்பான தகவல்களை கூறுவதும் ஊடகங்களின் பிரதான கடமை. அந்த வகையில்தான் சம்பத்குமாரின் உரையாடல் தொடர்பான ரகசிய வீடியோ பதிவை நாங்கள் ஒளிபரப்பினோம். இந்த சூழலில் ஊடகங்களின் குரலை ஒடுக்கும் விதத்தில் தோனி தாக்கல் செய்துள்ள இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x