Published : 14 Apr 2022 12:09 AM
Last Updated : 14 Apr 2022 12:09 AM

'சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன்...' - சமத்துவ நாள் உறுதிமொழி | அரசாணை வெளியீடு

கோப்பு படம்

சென்னை: ‘அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து தமிழக அரசு உறுதிமொழி குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்; பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்; சமூகம் ஏற்படுத்திய ஏற்றத் தாழ்வை, கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலமாக சமப்படுத்திய போராளி; ‘இருட்டறையில் இருக்குதடா உலகம்; சாதி இருக்கிறதென்போனும் இருக்கின்றானே’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய வரிகளைப்போல, சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தைத் தன்னுடைய பரந்த அறிவால், ஞானத்தால் விடிய வைத்த விடிவெள்ளி அம்பேத்கர். அறிவுச்சுடராய் விளங்கி அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொடுத்தவர். அவருடைய கருத்துக்கள் ஆழமும், விரிவும் கொண்டவை; எதிர்காலத்திற்கு ஒளிவிளக்கு அது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை ‘சமூகநீதி நாளாக’அறிவித்தது போல, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ம் தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மகிழ்ச்சியோடு இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு அளவு வெண்கலச் சிலையை நிறுவ வேண்டுமென்று திருமாவளவன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைத் தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்துப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆ.ராசா ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழக அரசால் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும்" என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்த தமிழக அரசு சமத்துவ நாள் உறுதிமொழியை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

''சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்

சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,

ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,

எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,

சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,

சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும்,

சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.”

என சமத்துவ நாள் உறுதிமொழியாக அரசாணை வெளியீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x