Published : 13 Apr 2022 06:09 AM
Last Updated : 13 Apr 2022 06:09 AM

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,300 கோடியில் 750 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

பேரவையில் நேற்று பொதுப்பணி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எ.வ.வேலு.

சென்னை: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.2,300 கோடி செலவில் 750 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசியபோது அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 150 கி.மீ. சாலைகள் 4 வழித் தடமாகவும், 600 கி.மீ. சாலைகள் 2 வழித்தடமாகவும் ரூ.2,300 கோடிமதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ரூ.485 கோடி செலவில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.

பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி ரூ.322 கோடி செலவிலும், பாடி மேம்பாலம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணி ரூ.100 கோடி செலவிலும், தாம்பரம் சண்முகம் சாலை அருகே இணைப்புச் சாலை அமைக்கும் பணி ரூ.10கோடியிலும் மேற்கொள்ளப்படும்.

சென்னை மாநகரில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு உட்பட4 இடங்களில் ரூ.56 கோடியில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படும். சேலம், கோவை, திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர் உட்பட 8 மாவட்டங்களில் 12 இடங்களில் ரூ.577.27 கோடியில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும்.

கோவை, திருச்செங்கோடு, திருவண்ணாமலை நகரங்களில் ரூ.500 கோடியில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். 434 தரைப்பாலங்கள் ரூ.1,105 கோடி செலவில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும். ஈரோடு, கரூர், திருச்சிமாவட்டங்களில் ரூ.136.32 கோடியில் 9 ஆற்றுப்பாலங்கள் கட்டப்படும். ஊட்டிக்கு ரூ.70 கோடி மதிப்பீட்டில் மாற்றுப்பாதை அமைக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.41.75 கோடியில் தடுப்புச்சுவர் கட்டப்படும்.

திருப்பரங்குன்றம் பசுமலை அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ரூ.26.33 கோடியில் புதிய இருவழிச்சாலை அமைக்கப்படும். தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 190 ‘சி’ வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.72 கோடி செலவில் கட்டப்படும்.

பொதுப்பணித் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 308 உதவி பொறியாளர் பணியிடங்கள் நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படும்.

முதல்வருக்கு பாராட்டு

முதல்வர் ஆற்றிய கரோனா தடுப்பு பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரே பாராட்டியுள்ளார். எதிர்க்கட்சிதுணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், வேலுமணி, பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் தலைவர்கள் என அனைத்து கட்சி தலைவர்களுமே முதல்வரை பாராட்டுவதை நாம் பார்த்தோம். ஆக, சட்டப்பேரவையே முதல்வரை பாராட்டிக்கொண்டிருக்கிறது. பல்வேறு பணிகளுக்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முதல்வரை பாராட்டியிருக்கிறார்கள்.

கடன் பெற உதவும் துறை

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் அங்கமாக திகழ்வது பொதுப்பணித் துறை. இதில்மூலதன சொத்துகளை வாங்கினால்தான் நிதித் துறைக்கே உதவியாக இருக்கும். அப்போதுதான் கடனே கேட்க முடியும். மூலதன செலவைஉருவாக்குவது பொதுப்பணித் துறைதான். அரசுக்கு மூலதன சொத்துக்களை உருவாக்குவது இதன் தலையாய பணி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருணாநிதி நினைவிடம்: கலங்கிய அமைச்சர்

அமைச்சர் எ.வ.வேலு தனது பதிலுரையின்போது, ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிடம் அருகே 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் நினைவகம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. கருணாநிதியால் எம்எல்ஏ ஆனவர்கள் 500-க்கும்மேல், எம்.பி. ஆனவர்கள் 200-க்கும் மேல், நான் உட்பட அமைச்சர்ஆனவர்கள் 100-க்கும் மேல் இருப்பார்கள். அவர்களுக்கு கிடைக்காதவாய்ப்பை, கருணாநிதிக்கு நினைவிடம் கட்டும் வாய்ப்பை தலைவர் எனக்கு வழங்கியுள்ளார். என் காலம் உள்ளவரை அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’’ என்று உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x