Published : 13 Apr 2022 07:44 AM
Last Updated : 13 Apr 2022 07:44 AM

ஏப்.16-ல் வைகை ஆற்றில் எழுந்தருள அழகர்கோயிலில் இருந்து நாளை கள்ளழகர் மதுரை புறப்படுகிறார்: களைகட்டும் சித்திரை திருவிழா

கள்ளழகர் போல் வேடம் அணிவதற்கான ஆடைகளை மதுரை குன்னத் தூர் சத்திரத்தில் வாங்கும் மக்கள். படம்: ஆர்.அசோக்

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக கள்ளழகர் நாளை (ஏப்.14) அழகர்கோவில் மலையிலிருந்து மதுரைக்கு புறப்படுகிறார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. நாளை திருக்கல்யாணம் நடக்கிறது. அழகர்கோயிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று மாலை கோயில் வளாகத்திலுள்ள கல்யாண மண்டபத்தில் அழகர் எழுந்தருளினார்.அதே மண்டபத்தில் இன்றும் தரிசனம் தருகிறார்.

நாளை மாலை 6 மணியளவில் அழகர்கோவில் மலையிலிருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி ஏப்.15-ம்தேதி காலை மதுரை எல்லையான மூன்றுமாவடி வருகிறார்.

அங்கு பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அன்றிரவு 9 மணியளவில் தல்லாகுளம் பெருமாள்கோயில் வந்தடையும் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அன்றிரவில் வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றியபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

வழிநெடுகிலும் பலநூறு மண்டகப்படிகளில் அருளாசி தந்தபடி தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் வந்தடைகிறார். அங்குஏப்.16-ம் தேதி சனிக்கிழமைஅதிகாலையில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர் கோரிப்பாளையம் வழியாகவைகை ஆற்றை அடைகிறார். அன்று காலை 5.50 முதல்6.20 மணிக்குள் வைகை ஆற்றில்இறங்கி பக்தர்களுக்கு காட்சிதருகிறார்.

இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினர் உள்ளிட்டபல லட்சம் பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல் துறை உயர் அதிகாரிகள் செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார்பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொடர்ந்து தசாவதாரம், பூப்பலக்கு என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று காட்சி தரும் அழகர் ஏப்.20-ல் அழகர்கோயில் திரும்புகிறார்.

ஏற்கெனவே மீனாட்சி கோயில்சித்திரை திருவிழாவில் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வரும் நிலையில், அழகர்கோயில் சித்திரை விழாவும் இணைவதால் மதுரை களைகட்டி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x