Published : 12 Apr 2022 06:30 AM
Last Updated : 12 Apr 2022 06:30 AM

மத்திய பல்கலை.களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தீர்மானம் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று இதுகுறித்து அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு என்று அறிவித்து, அதை2022-23 கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓர் அறிவிப்பை மத்தியஅரசின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து இந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

மத்திய அரசின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு, 2022-23 கல்வியாண்டு முதல், மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வுமுகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலமே நடக்கும் என்று அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்றும், மாநில பல்கலைக்கழகஙகள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ளபல்வேறு மாநில பாடத் திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்காது. பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை பிரிவைச்சேர்ந்தவர்கள். எனவே, என்சிஇஆர்டி பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு, மத்தியபல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தகுதியான பெரும்பாலோருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும். அத்துடன் நாட்டில் உள்ளபல்வேறு மத்திய பல்கலைக்கழங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் என்று இப்பேரவை கருதுகிறது.

இந்த நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்டகால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுக்கிறது. அத்துடன் மாணவர்கள் தங்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. மேலும், மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல்போல வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வை செயல்முறைக்கு கொண்டுவருவதால் பள்ளிக்கல்வியுடன் பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவர்.

எனவே, மாநில அரசுகளின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்த உள்ள பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், ‘‘நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள1.80 லட்சம் இடங்களை நிரப்பஇந்த நுழைவுத் தேர்வு கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் பிளஸ் 2 மதிப்பெண்கள் முற்றிலும் புறந்தள்ளப்படுகிறது. இந்த தேர்வு வருவதை அனுமதிக்கக் கூடாது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்வை எதிர்த்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது.’’ என்றார்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக),சிந்தனைச்செல்வன் (விசிக), மா.சின்னதுரை (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோரும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர்.

இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘தீர்மானத்தின் மீது பாஜக தவிர்த்து எல்லா கட்சிகளின் பிரதிநிதிகள், தலைவர்கள் வரவேற்று பேசி, ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தந்துள்ளனர். இந்த தீர்மானம் தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிப்பதாக இருப்பதால் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எட்டரை கோடி தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

பாஜக வெளிநடப்பு

முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த தேர்வை விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் க.பொன்முடி, ‘‘இப்படித்தான் நீட் தேர்வை கொண்டுவரும் போதும்சொன்னார்கள். இந்த தேர்வுக்கும் முதலில் இப்படி சொல்லிவிட்டு, அதன்பின் கட்டாயப்படுத்துவார்கள்’’ என்றார்.

பின்னர், தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுவலியுறுத்தி நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x