Published : 12 Apr 2022 07:03 AM
Last Updated : 12 Apr 2022 07:03 AM

தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றங்களின் முதல் கூட்டத்தில் சொத்து வரி மறுசீராய்வு: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ஆவடி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கவுன்சிலர்கள் .

திருவள்ளூர்/செங்கை/காஞ்சி: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆவடி மாநகராட்சிகளின் முதல் மாமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சொத்து வரி மறுசீராய்வு செய்யும் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார் தலைமையிலும், துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் எஸ்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஆவடி மாநகராட்சியில் சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு, 2022-23 முதலாம் அரையாண்டு (2022, ஏப்ரல் 1) முதல் சொத்து வரி பொது சீராய்வு செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கவுன்சிலர்களான மதுரை ஆறுமுகம் (25-வது வார்டு), பிரகாஷ் (1-வது வார்டு) கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கவுன்சிலரான ஜான் (10-வது வார்டு) வரி சீராய்வு தொடர்பாக மறு பரிசீலனை செய்ய கோரிக்கைவிடுத்தார்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு, மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார் கூறியதாவது: ஆவடி மாநகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை மூலம் 2021-22-ம் நிதியாண்டு கணக்கின்படி மொத்த வருவாய் ரூ.55.75 கோடி. இதில் ரூ.24.70 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.31.05 கோடியை வரும் 30-ம் தேதிக்குள் வசூல் செய்ய மாநகராட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலுவைத் தொகையைத் தினமும் ஒரு கோடி ரூபாய் என்ற அளவில் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சனி, ஞாயிறுகளில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது.

ஆவடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாம்பரம் மார்க்கெட்

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் பெண் மேயரான திமுகவைச் சேர்ந்த க.வசந்தகுமாரி தலைமையில், துணை மேயர் ஜி.காமராஜ், ஆணையர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், முதல் தீர்மானமாகத் தாம்பரத்தை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சாதாரணமான 171 தீர்மானங்கள், 17 அவசர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருப்பு சட்டை அணிந்து வந்து கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக, கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 9 பேர் மற்றும் சுயேச்சை உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தாம்பரம் மார்க்கெட்டை இடிப்பதை எதிர்த்தும் சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அமளியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் கூறியதாவது: தாம்பரம் பகுதி மக்கள் ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசின் கடுமையான சொத்து வரி உயர்வு சாதாரண ஏழை, எளிய மக்களைப் பெருமளவில் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே கருப்புச் சட்டை அணிந்து வந்து கூட்டத்தில் பங்கேற்றதாகவும் தெரிவித்தார்.

துணை மேயர் வெளிநடப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கிய உடன் மற்ற மாநகராட்சிகளில் இருக்கை ஒதுக்கப்பட்டதுபோல் துணை மேயருக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று துணை மேயர் குமரகுருநாதன் குற்றம் சாட்டினார். மேயருக்கு அருகில் ஆணையருக்கும், துணை மேயருக்கும் இருக்கை ஒதுக்காமல் கீழே ஒதுக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டி அவர் வெளிநடப்பு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பான தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x