Last Updated : 15 Apr, 2016 09:47 AM

 

Published : 15 Apr 2016 09:47 AM
Last Updated : 15 Apr 2016 09:47 AM

பல பிரிவுகளாக பிரிந்திருந்தாலும் முக்கியத்துவம் இழக்காத முஸ்லிம் கட்சிகள்: திமுக, அதிமுகவிடம் 13 தொகுதிகளை பெற்றன

தமிழகத்தில் முஸ்லிம் இயக்கங்களில் எத்தனை பிளவுகள் ஏற்பட்டாலும், அவற்றுக்கான முக்கியத்துவம் என்பதை பிரதான அரசியல் கட்சிகள் ஒருபோதும் குறைத்துக் கொண்டதில்லை. அதன் வெளிப்பாடுதான், பிரதான முஸ்லிம் இயக்கங்கள் திமுக, அதிமுக கூட் டணியில் 13 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தமிழகத்தில் 10 சதவீத வாக்கு வங்கியை கொண்டுள்ள முஸ்லிம் சமுதாய மக்கள், ராமநாதபுரம், துறை முகம், ஆயிரம் விளக்கு, ஆம்பூர், வாணியம்பாடி, பூம்புகார், தொண்டா முத்தூர், நாகப்பட்டினம், வேப்பனப் பள்ளி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, கடையநல்லூர் என 30-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர்.

கூடுதல் இடஒதுக்கீடு, 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லிம் கைதி களை விடுவிக்க வேண்டும், வக்பு வாரிய சொத்துக்களை முறையாக பராமரிக்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகியவை முஸ்லிம் மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன. தமிழகத்தில் இன்றைக்கு 250-க்கும் அதிகமான முஸ்லிம் இயக்கங்கள் உள்ளன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, தாவூத் மியாகானின் இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற ஒரு சில கட்சிகள்தான் தங்களை தேர் தல் ஆணையத்தில் பதிவு செய்து கொண் டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள இத்தனை இயக்கங்களுக்கும் தொடக்கப்புள்ளியாக இருந்தது காயிதே மில்லத் தலைமையிலான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக். கடந்த 1967-ல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதன் பின்னணியில் பெரும் பங்காற்றியது ஐயுஎம்எல். அன்று தொடங்கிய ஐயுஎம்எல் - திமுக உறவு இன்றைய காதர் மொய்தீன் காலம்வரை தொடர்கிறது. அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அப்துல் சமது, அவரை ஆதரித்தார். அப்துல் லத்தீப் கருணாநிதியை ஆதரித்தார்.

விளைவு 2 அணியானது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இது தமிழகத்தில் இஸ்லாமிய இயக்கங்களிடையே ஏற்பட்ட முதல் பிளவாகும். நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, கேரள காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்த ஐயுஎம்எல், அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என சுலைமான் சேட் வலியுறுத்தினார். அதற்கு மற்ற தலை வர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஐயுஎம் எல்-ல் இருந்து விலகிய சுலைமான் சேட், இந்திய தேசிய லீக் கட்சியை தொடங்கினார்.

இதுதவிர, ஐயுஎம்எல் பெயருடன் அப்துல் சமதுவின் மகள் பாத்திமா முஷாபர், காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான் ஆகியோரும் தனித்தனியே இயக்கம் நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பு 1995-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. இந்த அமைப்பில் இருந்து வெளியேறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை ஆரம்பித்தார் பி.ஜெய்னுலாபுதீன். பின்னர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தில் இருந்து வெளியேறி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை தொடங்கினார் எஸ்.எம்.பாக்கர். இப்படி, பல பிரிவுகளாக சிதறியது முஸ்லிம் இயக்கங்கள்.

அந்த வகையில், தமிழகத்தில் இந்தத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்பட்டது. மமகவின் பொதுச் செயலாளராக இருந்த தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி, மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கினார். இந்தக் கடசிக்கு அதிமுக கூட்டணியில் 2 தொகு திகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஷேக் தாவூத் கட்சிக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக பக்கம் பெரிய கட்சிகள் கூட்டணிக்கு வராததால், ஐயுஎம்எல் கட்சிக்கு 5, மமகவுக்கு 5 என்று தாராளம் காட்டியுள்ளது அதன் தலைமை. இது வரை இல்லாத அளவில் இந்தத் தேர்த லில் திமுக, அதிமுகவிடம் இருந்து 13 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகள் பெற்றுள்ளன.

பல பிரிவுகளாக பிரிந்திருந்தாலும் முஸ்லிம் கட்சிகளின் முக்கியத் துவம் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x