Last Updated : 09 Apr, 2022 06:07 PM

Published : 09 Apr 2022 06:07 PM
Last Updated : 09 Apr 2022 06:07 PM

அமித் ஷா பேச்சு இந்திய ஒருமைப்பாட்டுக்கும், மாநிலங்களின் சுய உரிமைக்கும் எதிரானது: நாராயணசாமி குற்றச்சாட்டு

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: இந்தி மொழி மட்டுமே பேச வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு இந்திய ஒருமைப்பாட்டுக்கும், மாநிலங்களில் சுய உரிமைக்கும் எதிரானது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பல மொழிகள், மதங்கள் கொண்ட நமது நாட்டில் இந்தி மொழி மட்டுமே பேச வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

இந்தி மட்டும் தான் இருக்க வேண்டும் என்று சொல்வது இந்திய ஒருமைப்பாட்டுக்கும், மாநிலங்களின் சுய உரிமைக்கும் எதிரானது. புதுச்சேரி மாநிலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இணைப்பு மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு என 5 மொழிகள் பயன்பாட்டில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக முதல்வர் இந்தி திணிப்பு வேலை எடுபடாது என்று கூறியிருக்கிறார். எக்காலத்திலும் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அமித்ஷா தனது பேச்சை திரும்ப பெற வேண்டும்.

மருத்துவ கல்வியில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் கடந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு
வழங்க தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். ஆனால் ஆளுநர் அதை வேண்டுமென்றே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதன்மூலம் மத்திய பாஜக கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. மருத்துவக்கல்வி சேர்க்கைக்கு கால அவகாசம் உள்ளது.

தற்போதைய இணக்கமான ஆளுநர் மூலம் இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து ரங்கசாமி பெற வேண்டும். இதை பெறாவிட்டால் அடிமை ஆட்சியைத் தான் ரங்கசாமி நடத்துகிறார் என மக்கள் நினைக்கும் நிலை உருவாகும். அதே போன்று கியூட் நுழைவு தேர்வு என்பது தவறான முடிவு. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்கு எதிரானது. இதனால் மிகப்பெரிய அளவில் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் கியூட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.

ஆனால் நமது முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதாததால் அவர் பாஜகவிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டார். மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழலில் மின் விநியோகத்தை தனியாருக்கு கொடுப்பது மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கும். புதுச்சேரியில் நிலம், வீடு அபகரிப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடு, நிலம் திட்டமிட்டு போலி பத்திரம் தயாரித்து அபகரிக்கப்பட்டு வருகிறது. எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு சொந்தமான இடம் போலி பத்திரம் தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்திரப்பதிவு செய்ய மாட்டேன் எனக்கூறிய சார் பதிவாளர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இது தொடர்பாக ஆளும் என்ஆர் காங்கிரஸ் அரசு, காவல்துறை விசாரணைக்கு தடை போட்டுள்ளது.

சார் பதிவாளர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனவே இதன் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ-யிடம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும். இதில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஆகியோருக்கு தொர்பு உள்ளது என கூறப்படுகிறது. புதுச்சேரி பத்திரப்பதிவு அலுவலகம் கொள்ளை கூட்டத்தின் தலைமை அலுவலகமாக உள்ளது. இந்த சம்பவங்கள் எல்லாம் முதல்வர், அமைச்சர்கள் அலுவலகத்தில் இருந்து திட்டமிடப்பட்டு நடக்கிறது." என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x