Last Updated : 09 Apr, 2022 07:10 AM

 

Published : 09 Apr 2022 07:10 AM
Last Updated : 09 Apr 2022 07:10 AM

மலைக்கிராமத்துக்கு செல்ல வாகன வசதி கோரி சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தையுடன் தாய் காத்திருப்புப் போராட்டம்

உடுமலை: உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே திருமூர்த்திமலை, ஈசல் திட்டு, குழிப்பட்டி, மாவடப்பு, குருமலை, மேல்குருமலை, காட்டுப்பட்டி, கோடந்தூர், பூச்சிகொட்டாம்பாறை, தளிஞ்சி, தளிஞ்சி வயல் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள், அத்தியாவசிய தேவை மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பல மைல் கடந்து உடுமலைக்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

உடுமலை-ஆனைமலை செல்லும் வழியில் உள்ள எரிசனம்பட்டி, உடுமலை-அமராவதி அணை செல்லும் வழியில் உள்ள அமராவதிநகர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மலைவாழ் மக்கள் சிகிச்சை பெற்றுச் செல்ல ஏதுவாக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால் பிரசவத்துக்கு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

பிரசவத்துக்கு பின் அவர்கள் வீடுவரை செல்ல இலவச வாகன வசதியும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் மலைக்கிராமத்துக்கு செல்ல உரிய வாகனம் இல்லையென எரிசனம்பட்டி மருத்துவ பணியாளர்கள் கூறியதால், பிறந்த குழந்தையுடன், 2 நாட்களாக தாய் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களுக்கு முன் குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு, உடுமலை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்புக்காக எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவரை, சிகிச்சை முடிந்ததால் வீட்டுக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். எனினும் அங்குள்ள இலவச வாகனம் மூலம் ஆழியாறு வரை மட்டுமே செல்ல முடியும். அங்கிருந்து சொந்த வாகன ஏற்பாடு மூலம் குழிப்பட்டி செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்தும், அரசு உத்தரவுப்படி வீடு வரை வாகன வசதி செய்து தரக்கோரியும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே தாயும், சேயும் காத்திருக்கின்றனர்’’ என்றனர்.

இதுகுறித்து எரிசனம்பட்டி சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பார்த்திபன் கூறும்போது, ‘‘இம்மையத்தில் உள்ள வாகனங்கள் சமதள பகுதியில் மட்டுமே இயங்கக் கூடியவை. மலைக்கிராமங்களுக்கு செல்ல அதற்கேற்ற வாகன வசதி இல்லை. தற்காலிக ஏற்பாடாக வனத்துறை வாகனத்தில் நாளை (இன்று) அவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுவர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x