Published : 09 Apr 2022 05:48 AM
Last Updated : 09 Apr 2022 05:48 AM

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் - அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா?

சென்னை: சென்னை மாநகராட்சி 1688-ல் உருவாக்கப்பட்டது. தொடக்கம் முதலே பட்ஜெட் தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டு, துறை சார்ந்த செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களைக் கண்ட மாநகராட்சிக்கு 1919-ல் தனி சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேர்தல் மூலமாக மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலமாக மேயரைத் தேர்தெடுக்கும் நடைமுறை 1933-ல் அமல்படுத்தப்பட்டது.

அந்த தேர்தலின்போது சென்னை மாநகரக மக்கள் தொகை 6.47 லட்சம். மாநகராட்சியின் பரப்பு 76 சதுர கிலோமீட்டர். தேனாம்பேட்டை, ராயபுரம், ஜார்ஜ்டவுன், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம் ஆகிய 10 பகுதிகள் மாநகராட்சியில் இடம்பெற்றிருந்தன. அவை 30 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

1933-ல் நடைபெற்ற தேர்தலில் ராஜா சர் முத்தையா செட்டியார் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், தலா ஒரு தலைவர் 6 உறுப்பினர்களைக் கொண்ட வருவாய், நிதி, பணிகள், சுகாதாரம், கல்வி என 4 நிலைக் குழுக்கள் செயல்பட்டன.

சுமார் 89 ஆண்டுகளுக்கு முன், 1933-34 நிதியாண்டில் ரூ.81 லட்சத்து 28 ஆயிரத்து 690 மதிப்பில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டு பட்ஜெட் மதிப்பு ரூ.72 லட்சத்து 30 ஆயிரத்து 332-ஆக இருந்துள்ளது.

அலங்கார விளக்குகள்

1934 மார்ச் 31-ம் தேதி, மாநகரப் பகுதியில் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு அலங்கார விளக்குகளை நிறுவுவது என்றும், வருவாய் நிதியில் இருந்து இதற்கு செலவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகராட்சி பரப்பு 426 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. 200 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில், 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.3,481 கோடியாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகையும் 74 லட்சத்தைக் கடந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று (ஏப்ரல் 9) தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் மதிப்பீடு ரூ.3,500 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

46-வது மேயர் ஆர்.பிரியா இன்று மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

திடக்கழிவு மேலாண்மை

மாநகராட்சியில் திடக்கழிவுமேலாண்மையை அமல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. கொசுத் தொல்லையும், கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதும் மாநகரின் அடையாளமாக மாறிவிட்டது. பெரும்பாலான மழைநீர் வடிகால்கள் கொசு உற்பத்தி மையமாக மாறிவிட்டன. வட சென்னைக் குழந்தைகளிடம் கால்பந்து, குத்துச் சண்டை மீது ஆர்வம் அதிகமாக இருந்தாலும், உரிய பயிற்சிக் களங்கள் இல்லை.

பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் இணையதளம் மூலமாக இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், நடைமுறையில் பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. எனவே, இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், இதுபோன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படுமா என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x