Published : 08 Apr 2022 06:45 PM
Last Updated : 08 Apr 2022 06:45 PM

’நிபந்தனையற்ற மன்னிப்பு’ - தனித்தனி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய எஸ்.வி.சேகருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டது தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளதை 4 வழக்குகளிலும் தனித்தனி பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவுகள் நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கப்பட்டது. நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே மனுதாரர் பகிர்ந்ததாகவும் அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைகூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் துரதிர்ஷ்டவசமாக பகிர்ந்ததாகவும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை எனக் கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக மனு தாக்கல் செய்யபட்டது. விசாரணைக்கு தேவையான சமயத்தில் ஆஜராவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, 4 புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x