Published : 06 Apr 2022 09:12 PM
Last Updated : 06 Apr 2022 09:12 PM

மீன் மார்க்கெட் ஆன மாட்டுத்தாவணி கனரக வாகனக் காப்பகம்: ரூ.6 கோடி மாநகராட்சி பணம் விரயம்?

மீன் மார்க்கெட்டாக மாறியுள்ள மதுரை மாட்டுத்தாவணி கனரக வாகனக் காப்பகம்

மதுரை: மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் ஆம்னி பேருந்துகள் நிலையத்தின் பின்புறம் ரூ.6 கோடியில் கட்டப்பட்ட கனரக வாகன காப்பகம் தற்போது மீன் மார்க்கெட்டாக செயல்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து மீனாட்சிமிஷன் மருத்துவமனை ரவுண்டா, திருமங்கலம் வரை ’ரிங்’ ரோடு செல்கிறது. இந்த சாலை வழியாகதான் தென் தமிழகத்தில் இருந்து கனரக வாகனங்கள், பல்வகை சரக்கு வாகனங்கள், பேருந்துகள், கார்கள் மதுரைக்கு வந்து செல்கின்றன. இதில் கனரக வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன காப்பகங்கள் இல்லாமல் ’ரிங்’ ரோடு சாலையோரம் ஆங்காங்கே நிறுத்திவிட்டு ஒய்வெடுக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் வேகமாக வரும் பிற வாகனங்கள், நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

இதனால், 2014-ம் ஆண்டே கனரக வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த மாநகராட்சி நிர்வாகம், மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்துக்கு பின்புறம் ரூ.6 கோடி மதிப்பில் கனரக வாகனங்கள் காப்பகத்தைக் கட்டியது. இங்கு 125-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் தங்குமிடம், கழிப்பறை, சமையல் அறை, சாப்பிடும் இடம், பணி நிலையம், பணிப் பட்டறை மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

இந்த வாகன காப்பகத்தில் கனரக வாகனங்களை நிறுத்துவது மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த கனரக வாகன காப்பகம் திறப்பு விழா கண்ட வேகத்திலே முடங்கியது. சிறிது காலம் மட்டுமே கனரக வாகன காப்பகமாகவே செயல்பட்டது. அதன்பின் வாகன காப்பகத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதியில்லாமல் இந்தக் காப்பகம் மூடப்பட்டது.

சாலை அமைக்காமலே வாகனக் காப்பகம் அமைத்த மாநகராட்சியின் அலட்சிய செயல்பட்டால் 2014-ம் ஆண்டிலே ரூ.6 கோடியில் கட்டிய வாகனக் காப்பகம் திட்டம் தற்போது "மீன் மார்க்கெட்" ஆக செயல்பட தொடங்கியிருக்கிறது. கரிமேடு மீன் மார்க்கெட் கரோனா காலத்தில் தற்காலிகமாக மூடிக்கிடந்த இந்த வாகன காப்பகத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு மீன் மார்க்கெட் அங்கு செல்லவில்லை.

தற்காலிகமாக தொடங்கப்பட்ட இந்த மீன் மார்க்கெட் தற்போது கனரக வாகனக் காப்பகத்தில் நிரந்தரமாகவே செயல்பட தொடங்கிவிட்டது. இது குறித்து முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா கூறும்போது: "நான் மேயராக இருந்த கடைசி நேரத்தில் இந்த திட்டம் நடந்தது. அந்த வாகனக் காப்பகத்திற்காக வண்டியூர் கண்மாயை ஓட்டி தரமான சாலை அமைக்க திட்டம் இருந்தது. ஆனால், வாகனக் காப்பகத்தை அவசரமாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஆம்னி பேருந்து நிலையம் வழியாக வழிப்பாதை ஏற்படுத்தி கனரக வாகனங்கள் அங்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓடையை ஓட்டி அமைந்துள்ள மண் சாலை வழியாக கனரக வாகனங்கள் வாகன காப்பகத்திற்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டது. எனக்கு பிறகு இந்த திட்டத்தை கண்காணித்து செயல்படுத்தப்படவில்லை" என்று ராஜன் செல்லப்பா கூறினார்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் கூறும்போது, "தற்காலிகமாக தான் மீன் மார்க்கெட் அங்கு செயல்படுகிறது. மீன் மார்க்கெட் அங்கிருந்து சென்ற பிறகு வாகனக் காப்பகத்தை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x