Published : 06 Apr 2022 06:14 AM
Last Updated : 06 Apr 2022 06:14 AM

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது: மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. (அடுத்த படம்) கொடியேற்றத்தின்போது எழுந்தருளிய பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று கொடிஏற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்.14-ம் தேதி நடைபெறுகிறது.

மதுரையில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரைத் திருவிழாவாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் பக்தர்கள் பங்கேற்புஇன்றி இத்திருவிழா நடைபெற்றது.

தற்போது கரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுஉள்ளதால் இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் சித்திரைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரரும், சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர் சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் காலை 10.30 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று மாலை வெள்ளி சிம்ம வாகனம், கற்பக விருட்ச வாகனம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2-ம் நாளான இன்று பூத வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரரும், அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருள்கின்றனர். 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

8-ம் நாள் திருவிழாவான ஏப்.12-ம்தேதி இரவு 8.20 மணிக்கு மேல்8.44 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.ஏப்.13-ம் தேதி திக்கு விஜயம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்.14-ம் தேதி அதாவது சித்திரை முதல் நாள் காலை10.35 மணிக்குமேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் நடைபெற உள்ளது.

ஏப்.15-ம் தேதி காலை 6.30 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டமும் அதைத் தொடர்ந்து ஏப்.16-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x