Published : 03 Apr 2016 03:16 PM
Last Updated : 03 Apr 2016 03:16 PM

அரசியலமைப்பு சட்ட கட்டளைப்படி மதுவிலக்கைப் பேசினால் தேசத் துரோகமா?- கருணாநிதி கண்டனம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47-ஆவது பிரிவிலேயே "அரசு மது விலக்கைக் கொண்டு வரக் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்" என்று கட்டளையிடப்பட்டுள்ள நிலையில் மதுவிலக்கைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் எப்படி குற்றமாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுவிலக்குக்காகப் போராடி வரும் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு, திருச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியன்று நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்களில், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் சி.ராஜு, நிர்வாகக் குழு உறுப்பினர் காளியப்பன், டேவிட் ராஜ், சென்னை ஆனந்தியம்மாள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது, மாநாடு நடந்து முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு மார்ச் மாதம் 26ஆம் தேதியன்று அதிமுக அரசு தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது.

மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், அதிமுக ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவனை திருச்சியில் காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்தார்கள். பாடகர் கோவன் கூட கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தற்போது அடுத்த கட்டமாக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். ஜனநாயக ரீதியான கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை ஜெயலலலிதா ஆட்சியில் எப்படியெல்லாம் நெறிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.

மதுவால் குடும்பத்திலும், சமூகத்திலும் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் பற்றி திருச்சியில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும் மதுவால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கொடுமைகளை அனுபவித்தவர்களை அழைத்து வந்து, நெஞ்சை உலுக்கிடும் அவர்களுடைய அனுபவங்களைப் பேச வைத்துள்ளார்கள்.

மேலும், அந்த மாநாட்டில் பேசிய டாஸ்மாக் சங்கப் பொதுச் செயலாளர் தனசேகரன், "காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். 2014ஆம் ஆண்டில் ஆரம்பித்து தொடர்ந்து அதை வலியுறுத்தி வருகிறோம். முழு மதுவிலக்கு கொண்டு வருவதற்கு முன்னர் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மாற்று வேலைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்றும் கோரி வருகிறோம்" என்று தான் பேசியிருக்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 47-ஆவது பிரிவிலேயே "அரசு மது விலக்கைக் கொண்டு வரக் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்" என்று கட்டளையிடப்பட்டுள்ள நிலையில் மதுவிலக்கைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் எப்படி குற்றமாகும், எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை, நடைபெறுவது ஜெயலலிதாவின் ஆட்சி என்பதால், இந்த ஆட்சியில் மதுவிலக்கு மாநாடு நடத்துவதே குற்றமா?

இந்தியக் குற்றவியல் நடைமுறைகளிலிருந்து, தேசத் துரோகம் எனும் பிரிவையே நீக்க வேண்டும் என்று டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு நாட்டில் பரவலாக விவாதம் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் அதிமுக தொடர்ந்து இவ்வாறு தேசத் துரோக வழக்குகளைத் தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்போர் மீதெல்லாம் பதிவு செய்து வருவதை வன்மையாகக் கண்டிப்பதோடு, அந்த வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x