Published : 02 Apr 2022 01:43 PM
Last Updated : 02 Apr 2022 01:43 PM

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி கோப்புப்படம்.

சென்னை: சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவீத வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, சென்னை மாநகரத்தில் 600 சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215 உயர்த்தப்பட்டிருக்கிறது. 1201 சதுரஅடி முதல் 1800 சதுரஅடி வரை 100 சதவீதத வரி உயர்வும், 1801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவீத சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சொத்து வரி உயர்வு அனைத்து தரப்பினரையும் பலமுனைகளில் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. தமிழக முதல்வரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஏற்கெனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அறிவிக்கப்பட்டுள்ள இந்த சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவீத வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x