Last Updated : 29 Mar, 2022 02:22 PM

 

Published : 29 Mar 2022 02:22 PM
Last Updated : 29 Mar 2022 02:22 PM

'சாதியைச் சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமானப்படுத்தினார்' - முதுகுளத்தூர் ஒன்றிய ஆணையர் சொல்வது என்ன?

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன்

முதுகுளத்தூர்: "தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி என்னை அவமானப்படுத்தினார்" என்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் கூறியது: " நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சிவகங்கையில் உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இல்லத்துக்கு, நானும் எனது நண்பருமான பிடிஓ அன்புக்கண்ணனும் சென்றோம். அமைச்சரின் இல்லத்துக்குச் சென்றவுடன், அமைச்சருக்கு நான் வணக்கம் தெரிவித்தேன். பதிலுக்கு அவர் வணக்கம் கூறவில்லை. என்னைப் பார்த்தவுடன் அமைச்சர், ஏன்யா நீ ஒரு ........ பிடிஓ, சேர்மேனுக்கு மட்டும்தான் நீ சப்போர்ட் பண்ணுவ, சேர்மேன் சொல்வதை மட்டும்தான் நீ கேட்ப, மற்றவர்கள் யார் சொன்னாலும் நீ கேட்க மாட்ட, யார் போன் செய்தாலும் எடுக்க மாட்ட, நீ ஒரு ......... சேர்ந்த பிடிஓ தானே?

இந்த பிளாக்ல, நீ ..... பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் உன்னை வைத்துள்ளேன். உன்னை உடனே டிரான்ஸ்பர் செய்து இந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன். முதன்மைச் செயலாளர் அவரது பெயரையும் உச்சரித்து, பலமுறை என்னை ...... பிரிவைச் சேர்ந்த பிடிஓ என்பதைக் குறிப்பிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் பேசினார்.

உடனடியாக என் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனே என்னை டிரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அமைச்சரின் உதவியாளர் கண்ணனிடம் கூறினார். மேலும், கடுமையாக என்னையும், அன்புக்கண்ணனையும் பேசிய "வெளியே போங்கய்யா" என்று நாயை விட கேவலமாக அமைச்சர் நடத்தினார். இதுகுறித்து ராம நாதபுரம் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகி யோரைச் சந்தித்து புகார் அளிக்க உள்ளேன்" என்று அவர் கூறியிருந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு: இந்நிலையில், இன்று (மார்ச் 29), இந்தச் சம்பவம் குறித்து ராம நாதபுரம் ஆட்சியரிடம் புகார் அளிப்பதற்காக முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் இன்று வந்திருந்தார். ஆனால், ஆட்சியர் இல்லாததால் அவர் புகார் அளிக்கவில்லை. இதனிடையே, அமைச்சர் ராஜகண்ணப்பன் ராஜேந்திரன் கூறுவதைப் போல எதுவும் கூறவில்லை என்று அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிப்பதற்காக ஒரு குழுவினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்.

(குறிப்பு: இந்தச் செய்தியில் சாதியின் பெயருக்கு பதிலாக .............. என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x