Published : 29 Mar 2022 09:06 AM
Last Updated : 29 Mar 2022 09:06 AM

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘அன்பாசிரியர்-2021’ விருதுக்கான தேர்வு: நேர்காணலில் ஆர்வத்துடன் பங்கேற்ற ஆசிரியர்கள்

சென்னை: தனித்துவத்தோடு செயல்பட்டு மாணவர்களுக்கு ஊக்கமும் பள்ளிக்கு பெருமையும் சேர்க்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘அன்பாசிரியர் - 2021’ விருதுகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்குகிறது.

லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து இந்த விருதை வழங்க உள்ளன. உடன் கொண்டாடுகிறது சங்கர் ஐஏஎஸ் அகாடமி.

விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியான பிறகு தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், சென்னை மற்றும் புதுச்சேரி மண்டலத்தை சேர்ந்த 12 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு சென்னை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அலுவலகத்தில் ஞாயிறு (மார்ச் 27) அன்று நடைபெற்றது. இதில், 84 பேர் பங்கேற்றனர்.

இந்த நேர்காணலுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் மாதவன் சிறப்பு நடுவராக தலைமை வகித்தார். சிறார் எழுத்தாளர் விழியன், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரஸ்வதி, உமா மகேஸ்வரி, டி.கீதா, டி.ஜே.நாகேந்திரன், அண்ணல் அரசு, லதா, சித்ரா, மரிய ஜோசப், பொன் வள்ளுவன் உட்பட 12 பேர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருந்தனர். நேர்காணலின்போது, பள்ளி வளர்ச்சியில் பங்கு, மாணவர் தனித்திறன் ஊக்குவிப்பு உட்பட பல்வேறு அம்சங்களை முன்வைத்து ஆசிரியர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதனுடன் ஆசிரியர்களின் செயல்பாடுகள் சார்ந்த ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து சிறப்பு நடுவர் மாதவன் கூறும்போது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் இந்த முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. குழுவாக இணைந்து பணிபுரிதல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தன்னை புதுப்பித்து கொள்ளுதல், மாணவர் சேர்க்கை, பள்ளி கட்டமைப்பு வசதியில் பங்களிப்பு உட்பட பல்வேறு அம்சங்களை முன்வைத்து ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’’ என்றார்.

ராம்ரா ஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் அன்பாசிரியர் விருதுக்கான நேர்காணலில் பங்கேற்க சென்னை அலுவலகத்துக்கு வந்திருந்த ஆசிரியர்கள்.

தேர்வுக்குழு உறுப்பினர்கள் பொன்வள்ளுவன், ஹரி ஆகியோர் கூறும்போது, ‘`அன்பாசிரியர் தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதால், அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதைவிட அன்பாசிரியர் மதிப்பு பெறுகிறது. மேலும், விருதுபெறும் ஆசிரியர்கள் செய்த சிறப்புகள் பொதுவெளியில் பகிரப்படுவதால், நல்லாசிரியர் விருது வென்ற பலரும் அன்பாசிரியர் மீதும் ஆர்வம் காட்டுகின்றனர்’’ என்றனர்.

சிறார் எழுத்தாளர் விழியன் கூறும்போது, ‘‘பள்ளி கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்து வரும் சிறந்த ஆசிரியர்கள் உரிய முறையில் கவுரவிக்கப்படுகின்றனர். அதேபோல், சமூகம் மீதான பார்வை, பெண்களை மதிப்புடன் நடத்துதல் போன்ற கருத்தியல் ரீதியாக மாணவர்களை பலப்படுத்தும் ஆசிரியர்களையும் கண்டறிந்து கவுரவிக்க வேண்டியது அவசியமாகும்’’ என்றனர்.

நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் முகமது அர்சித், உமா ஆகியோர் கூறும்போது, ‘‘அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில் மேலாண்மைக் குழுவில் ஆற்றிய பங்களிப்பு, பள்ளியை சுற்றியுள்ள வளங்கள், ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பல்வேறு கேள்விகள் சிறப்பானதாக இருந்தன. இவை தேர்வு நடைமுறை மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது. கற்பித்தலை தாண்டி ஒரு ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்துகிறது’’ என்றனர்.

முதல்கட்ட தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டத்துக்கு தேர்வானவர்களுக்கு, அதுகுறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x