Published : 28 Mar 2022 08:32 AM
Last Updated : 28 Mar 2022 08:32 AM

சசிகலாவுக்கு அதிமுகவில் வாய்ப்பில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சேலம்: “அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து தலைமை அலுவலகத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரை கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை” என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் துபாய் பயணத்தை அவரது குடும்பச் சுற்றுலாவாகத்தான் மக்கள் பார்க்கின்றனர். தனி போயிங் விமானத்தில் குடும்ப உறவுகளை அழைத்துக் கொண்டு ஸ்டாலின் துபாய் சென்றிருக்கிறார். இது தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்பத்துக்கு புதிய தொழில் தொடங்கவா? என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

நான் முதல்வராக இருந்தபோது, பயணிகள் விமானத்தில் தான் வெளிநாடு சென்றேன். என்னுடன் துறைஅமைச்சர்கள், செயலர்கள் மட்டுமே உடன் வந்தனர். தற்போதைய துபாய் கண்காட்சியில் அதிமுக அரசின் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் வெளிநாடு சென்றபோது, அதனை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார். (இது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பேசிய வீடியோ பதிவை பழனிசாமி காண் பித்தார்). ஆனால், நாங்கள் ஆக்கப்பூர்வமான திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தோம். விருதுநகர் பாலியல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம். அதிமுகவில் தற்போது 25 மாவட்டங்களுக்கான அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. உட்கட்சித் தேர்தல் முடிந்த பின்னர் நானும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்து திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவிப் போம்.

ஓபிஎஸ் தனிப்பட்ட கருத்து

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து தலைமை அலுவலகத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, அந்த விவகாரம் முடிந்து விட்டது. அதற்கு புத்துயிர் கொடுக்க முடியாது. சசிகலாவை கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை. சசிகலா குறித்து ஓபிஎஸ் பேசியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து.அதிமுக அரசு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், 97 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ளார். எட்டு வழிச்சாலையை, ‘எக்ஸ்பிரஸ் வே’ என பெயர் மாற்றி கொண்டு வர திமுக முயற்சித்து வருகிறது. காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றார். பேட்டியின்போது, முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, விஜயபாஸ்கர், புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x