Published : 25 Mar 2022 06:18 PM
Last Updated : 25 Mar 2022 06:18 PM

ராமநாதபுரம் | தொண்டி அருகே 2,000 ஆண்டு கால ஊர்களின் தடயங்கள் - அகழாய்வுக்கு கோரிக்கை

மருங்கூர் மற்றும் ஓரியூரில் கிடைத்த தொல்பொருட்கள்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் 2,000 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த இரு ஊர்களின் தடயங்களை கண்டறிந்துள்ள ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், அங்கு அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்கள், மருங்கூர்பட்டினம், ஊணூர் என்ற அருகருகே இருந்த இரு சங்க கால ஊர்களைக் குறிப்பிடுகின்றன. மருங்கூர்பட்டினம் கடற்கரையின் அருகில் கடற்கரைச்சோலை, உப்பங்கழி, நவமணிகள் விற்கும் கடைவீதிகளுடன் இருந்துள்ளது. ஊணூர் கடலின் ஓசை கேட்கும் தொலைவில், பழமையான பலவகை நெல் விளையும் செம்மண் பூமியாக, வழுதுணைத் தழும்பன் என்பவனின் கோட்டை மதில்களுடன் இருந்துள்ளது.

இந்நிலையில், தொண்டி அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் வே.ராஜகுரு, உறுப்பினர்கள் வை.வெற்றிவேல், வே.சேர்மராஜ் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். இது பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறும்போது, ''தீர்த்தாண்டதானம் கடற்கரையிலிருந்து மருங்கூர் 2 கி.மீ. தூரத்திலும், நேர்வழியில் ஓரியூர் கோட்டை 5 கி.மீ. தூரத்திலும் உள்ளன. மருங்கூர் மகாகணபதி ஆலயத்தின் மேற்கில் கண்மாய் அருகிலுள்ள திடலிலும், கண்மாய் உள்ளேயும் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இங்கு கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், அறுத்த சங்குகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், அரைப்புக் கல், சீனநாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள், சுடுமண் உறைகிணற்றின் உடைந்த ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

மேலும், மருங்கூரின் கடற்கரைப் பகுதியான தீர்த்தாண்டதானம் சிவன் கோயிலின் ஏழு கல்வெட்டுகளில் நான்கு இங்கு தங்கி இருந்த வணிகக் குழுக்களையும், வணிகர்களையும் குறிப்பிடுகிறது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள் சூழ்ந்த பாம்பாற்றின் ஒரு உப்பங்கழியும் உள்ளது. மருங்கூரில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் தீர்த்தாண்டதானம் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் சங்க காலம் முதல் கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை வணிக மையமாக இருந்ததை அறியலாம்.

எனவே, சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மருங்கூர்பட்டினம் இதுதான் என்பது உறுதியாகிறது. அதேபோல் ஓரியூர் கோட்டை மகாலிங்க சுவாமி கோயில் மற்றும் சேதுபதி அரண்மனை உள்ள வட்டவடிவமான சுமார் 20 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், சீனநாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

மருங்கூர் மற்றும் ஓரியூரில் கிடைத்த தொல்பொருட்களை ஆய்வு செய்யும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர்.

இக்கோயிலின் தெற்கில் ஆறடி உயரத்தில் ஒரு செங்கல் கட்டுமானம் உள்ளது. இதில் உள்ள ஒரு முழு செங்கலின் நீளம் 23 செ.மீ., அகலம் 14 செ.மீ., உயரம் 4 செ.மீ. ஆகும். இது இடைக்கால செங்கல் அளவில் உள்ளதால் பிற்காலப் பாண்டியர்களால் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையின் எச்சமாக இருக்கலாம். இங்கு சங்ககாலத்தில் மண்கோட்டையும், பாண்டியர் காலத்தில் செங்கல் கோட்டையும், சேதுபதிகள் காலத்தில் அரண்மனையும் பயன்பாட்டில் இருந்த தடயங்கள் உள்ளன.

மேலும், இப்பகுதி தற்போதும் அதிக நெல்விளையும் இடமாகவும், செம்மண் நிலமாகவும் உள்ளது. எனவே ஓரியூர் கோட்டை மகாலிங்கசுவாமி கோயில் பகுதி தான் ஊணூர் என்பது உறுதியாகிறது. இவ்விரு ஊர்களிலும் அகழாய்வு செய்து அதன் சிறப்பை வெளிக்கொண்டு வர வேண்டும்'' என்று ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x