Published : 24 Mar 2022 05:00 PM
Last Updated : 24 Mar 2022 05:00 PM

இலங்கைத் தமிழர்களிடம் பணம் வசூலிப்பதை படகு உரிமையாளர்கள் கைவிட வேண்டும்: வேல்முருகன்

வேல்முருகன் | கோப்புப் படம்

சென்னை: தங்களின் வாழ்வாரத்தை காப்பாற்றிக் கொள்ள தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களிடம், பணம் வசூலிப்பதை தமிழக படகு உரிமையாளர்கள் கைவிடுவதோடு, அவர்களுக்கு அரணாக நிற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.284 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.290, சர்க்கரை ரூ.290, 400 கிராம் பால் பவுடர் ரூ.790 என்ற விலையில் விற்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் இலங்கையில் ராஜபக்சே கும்பல் அரசின் அலட்சியமான அணுகுமுறையே. பட்டினிச் சாவிலிருந்து எப்படித் தற்காத்து கொள்வது என தெரியாமல், கோத்தய கும்பலை 'வீட்டிற்கு செல்' என்ற முழக்கத்துடன், அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவு தட்டுப்பாடு, வேலையின்மை காரணமாக யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் மேலும், அதிக எண்ணிக்கையில் தமிழகத்திற்கு பலர் அகதிகளாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே, தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், இது குறித்து இன்று தமிழக முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, தப்பி வரும் இலங்கை தமிழர்களில் பெண்கள், குழந்தைகள் முதலியவர்களை அகதி முகாம்களிலும், ஆண்களை புழல் சிறையிலும் அடைப்பது குறித்து இன்று (24-03-2022)காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் நேரில் சந்தித்து எடுத்துரைத்தேன்,

அதைக் கனிவுடன் கேட்ட முதல்வர் விரைவில் மத்திய அரசுடன் பேசி, இந்தச் சிக்கலை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒருபுறமிருக்க, இலங்கையில் இருந்து பெரும் கவலையோடு வரும் இலங்கை தமிழர்களை, தமிழகத்திற்கு அழைத்து வர, தமிழக படகு உரிமையாளர்கள் பெரும் தொகையை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சி ஏற்படுத்துவதோடு, வேதனையளிக்கிறது.

உணவின்றி, வேலையின்றி, தங்களது குழந்தைகளுக்கு பால் பவுடர் கூட வாங்க முடியாத அவல நிலையில், தமிழகத்திற்கு சென்றால் எப்படியாவது பிழைத்து கொள்ளலாம், தமிழர்கள் நமக்கு கைக்கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில், நமது உதவியை நாடி வருகின்றனர். அவர்களிடம் நாம் பெரும் தொகையை வசூலிப்பது முறையல்ல. அது தமிழர்களின் பண்பாடும் அல்ல.

அதனால், தங்களின் வாழ்வாரத்தை காப்பாற்றிக்கொள்ள வரும் இலங்கைத் தமிழர்களிடம், பணம் வசூலிப்பதை தமிழகப் படகு உரிமையாளர்கள் கைவிடுவதோடு, அவர்களுக்கு அரணாக நிற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x